பெரியண்ணன் பாணியை தவிர்க்கிறதா பா.ஜ.,?
ஆர்.வெங்கடேஷ்
தமிழகத்தில் அ.தி.மு.க.,வை முந்திக்கொண்டு, பல்வேறு சிறிய கட்சிகளோடு சேர்ந்து கூட்டணி அமைப்பதற்கு பா.ஜ., முனைப்பு காட்டுகிறது. பன்னீர்செல்வம், தினகரன் ஆகியோர் கூட்டணியில் இணைந்தனர். சரத்குமாரின் ச.ம.க., பா.ஜ.,வில் கரைக்கப்பட்டது; தே.மு.தி.க., -- பா.ம.க.,வுடன் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது.
ச.ம.க., இணைப்பு நிகழ்ச்சியில் ஒரு அம்சம் அனைவர் கவனத்தையும் ஈர்த்தது. அங்கே சரத்குமாருக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம். புகைப்படங்கள், வீடியோக்கள் அனைத்திலும் பா.ஜ., தலைவர்கள் பவ்யமாக அருகில் நிற்கின்றனர். கூட்டணி தலைவர்களுக்கு பிரதான இடம் கொடுக்கப்பட்டது.
தேசிய அளவில் ஆட்சியில் இருக்கும் ஒரு கட்சி, எதற்கு மாநில கட்சிகளிடம் இப்படிப்பட்ட பவ்யத்தை காட்ட வேண்டும்?
தமிழகத்தில் மட்டுமல்ல; பல மாநிலங்களிலும் பா.ஜ., இதே பாணி பவ்யத்தை காட்டி, கூட்டணி முயற்சியை செய்து வருகிறது. அதற்கு பல காரணங்கள் உள்ளன என்று பா.ஜ., வட்டாரங்கள் தெரிவித்தன.
இது குறித்து பா.ஜ., கட்சியினர் கூறியதாவது:
பீஹாரில் அம்மாநில முதல்வர் நிதீஷ் குமார், பா.ஜ., பக்கம் வந்தார்; ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவும், பவன் கல்யாணும் ஆதரவு தெரிவித்துள்ளனர். ம.பி.,யின் ஜெயந்த் சவுத்ரியின் ஆர்.எல்.டி.,யும் பா.ஜ., தலைமையிலான என்.டி.ஏ., கூட்டணிக்கு வந்துவிட்டது.
வலுவான கூட்டணி
கர்நாடகாவில் ஏற்கனவே குமாரசாமியின் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.,வோடு தான் இருக்கிறது. இதில்லாமல், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கையும் பா.ஜ.,வோடு கைகோர்க்க வைப்பதற்கான முயற்சியும் நடைபெறுகிறது. இவை எல்லாவற்றிலும் அடிப்படை சரடு ஒன்று தான். பா.ஜ., பெரியண்ணன் பாணியில் நடந்து கொள்ளாமல், இந்த சின்ன சின்ன கட்சிகளைக்கூட தம் கூட்டணிக்குள் கொண்டுவர முயற்சிக்கிறது.
அதற்கு அடிப்படை காரணம், அது நிர்ணயித்துள்ள இலக்கு. பா.ஜ., சொந்தமாக 370 இடங்களிலும், என்.டி.ஏ., கூட்டணி 400க்கும் அதிகமான இடங்களிலும் வெற்றி பெற வேண்டும் என்பதே அது.
இந்த எண்ணிக்கையை அடைய வேண்டுமானால், வலுவான கூட்டணி கட்சிகள் வேண்டும். அவர்கள் அந்தந்த மாநிலங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ள கட்சிகளாகவும் இருக்க வேண்டும். அவர்களிடம் போதுமான ஓட்டு சதவீதம் இல்லாமல் இருக்கலாம்.
அங்கேயெல்லாம் பா.ஜ.,வின் ஓட்டுகளும், அந்த கூட்டணி கட்சிகளோடு சேரும்போது நிச்சயம் வெற்றி கிடைக்கும்.
இன்னொரு புறம் அவர்களின் ஓட்டுகள், பா.ஜ.,வோடு இணையும்போது, பா.ஜ., வேட்பாளர்களும் கணிசமாக வெற்றி பெறுவர்.
இந்த விஷயத்தைப் பற்றி, மோடியின் வரலாற்றை எழுதியவரான நிலஞ்சன் முகோபாத்யாய் ஒரு செய்தியை சொல்கிறார். மோடி கூட்டணி கட்சிகளை எப்படி பார்க்கிறார் என்று அதில் அவர் விளக்கியுள்ளார்.
பணிவதன் காரணம்
'கடந்த, 1996ல் பா.ஜ., ஆட்சி அமைத்தபோது, அதற்கு சிவசேனா மற்றும் அகாலி தளம் தவிர, வேறு கூட்டணி கட்சிகளே இல்லை. இதனால் தான், 13 நாட்களில் அந்த ஆட்சி கவிழ்ந்தது. ஆனால், 1998ல் தேர்தலுக்கு முன்னரும் பின்னரும் பல கூட்டணி கட்சிகள், பா.ஜ.,வோடு இணைந்தன. அப்போது, பா.ஜ., வெற்றி பெறுவதற்கான 'வாய்ப்பு' அதிகமாக இருந்தது.
கூட்டணி கட்சிகள் பா.ஜ.,விடம் வருவதற்கும் விலகுவதற்கும் அடிப்படை, அவர்கள் அந்த கூட்டணி எவ்வளவு துாரம் 'வெற்றி பெறும்' என்று வைத்துள்ள மதிப்பீடு தான். பா.ஜ.,வோடு கூட்டணி கண்டால், தங்களால் கூடுதலாக இடங்களை பெற முடியும் என்று அவை மதிப்பிட்டால், அப்போது கூட்டணிக்கு வரும். ஆனால், பா.ஜ.,வை அவர்கள் சுமையாக கருதுவரேயானால், விலகிப் போய்விடுவர்' என்று தெரிவித்திருக்கிறார்.
இந்த எண்ணம் தான் இரு தரப்பிலும் களத்தில் தற்போது எதிரொலிக்கிறது.
எல்லாவற்றையும் விட, லோக்சபா தேர்தலில் அதிகபட்ச இடங்களை வென்றவர் என்ற வரலாற்றுப் புகழ் ராஜிவுக்கே இருக்கிறது. 1984 லோக்சபா தேர்தலில், 542 இடங்களில் 414 இடங்களை கைப்பற்றியது காங்கிரஸ்.
இந்திரா மறைவுக்குப் பின் ஏற்பட்ட அனுதாப அலையில் கிடைத்த அதிகபட்ச இடங்களாக அது கருதப்படுகிறது. அதையும் இப்போது உடைக்க வேண்டும் என்று நினைக்கும் பா.ஜ., அதற்காகவே கூட்டணி கட்சிகளோடு பணிந்து போய் கூட்டணி அமைத்து வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாசகர் கருத்து