விளவங்கோட்டில் விளைச்சல் கிடைக்குமா? கவனமாக காய் நகர்த்தும் காங்.,

முதன் முறையாக இடைத்தேர்தலை சந்திக்கும் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டசபை தொகுதியில், காங்., -- பா.ஜ., இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
விளவங்கோடு காங்., -- எம்.எல்.ஏ.,வாக இருந்த விஜயதரணி பா.ஜ.,வில் இணைந்தபின் பதவியை ராஜினாமா செய்தார். அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஒரு கட்சி எம்.எல்.ஏ., மாற்றுக்கட்சிக்கு சென்றால் அக்கட்சியில் ஒரு வருத்தம் இருக்கும்.
ஆனால், விஜயதரணி பா.ஜ.,வுக்கு சென்ற போது, காங்., நிர்வாகிகள் இனிப்பு வழங்கி கொண்டாடினர். விளவங்கோட்டில் காங்கிரசில் ஊறிப் போன பல ஆண்களை ஓரங்கட்டி விட்டு, தொடர்ச்சியாக மூன்று முறை கட்சியில் டிக்கெட் பெற்று வெற்றிக்கனியை பறித்த பலமான பெண் வேட்பாளராக விஜயதரணி பார்க்கப்பட்டார். கட்சிக்குள் எதிர்ப்பு இருந்தாலும் தனக்கென செல்வாக்கை வளர்த்து கொண்டார். கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் துாரத்து உறவினர் என்ற வகையிலும், கணவர் கிறிஸ்துவர் என்ற வகையிலும் இரு தரப்பிலும் ஓட்டுகளை அள்ளினார்.
தற்போது விஜயதரணி விலகியதால், காங்கிரசில் சீட் பெற பலரும் முட்டி மோதுகின்றனர். மேற்கு மாவட்ட தலைவர் பினுலால் சிங், இளைஞர் காங்கிரசைச் சேர்ந்த திவாகர், முன்னாள் மேற்கு மாவட்ட தலைவர் தாரகை கல்பர்ட் என இவர்களது பட்டியல் நீள்கிறது.
ஏற்கனவே ஒரு பெண் வெற்றி பெற்றதால் பெண்ணுக்கு வாய்ப்பு கொடுக்காத பட்சத்தில், பெண்களை காங்., மதிப்பதில்லை என்ற விஜயதரணியின் குற்றச்சாட்டுக்கு வலு சேர்ப்பதாக அமைந்து விடும் என்பதால், காங்., தரப்பில் கவனமாக காய் நகர்த்தப்படுகிறது.
பா.ஜ.,வை பொறுத்தவரை முன்னாள் மாவட்ட தலைவர் ஜெயசீலன் பெயர் அடிபடுகிறது. கடந்த தேர்தலில் விஜயதரணியை எதிர்த்து 58,804 ஓட்டுகள் பெற்றார். இது, முந்தைய தேர்தலை விட 13.05 சதவீதம் அதிகம். 2011 தேர்தலிலும் இவர் விஜயதரணியை எதிர்த்து போட்டியிட்டு 37,763 ஓட்டுகள் பெற்றார்.
இவருடன் மாவட்ட தலைவர் தர்மராஜ், டாக்டர் விஜயபிரசாத், பகத் சிங், கடந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்டு 12,292 ஓட்டுகள் பெற்று தற்போது பா.ஜ.,வில் இணைந்துள்ள மேரி ஆட்லின் ஆகியோர் பெயர்களும் வேட்பாளர் பட்டியலில் மேலிட பரிசீலனையில் உள்ளன.
காங்கிரசும், கம்யூனிஸ்டும் மாறி மாறி வெற்றி பெற்று வந்த விளவங்கோட்டில் தற்போது இந்த இரு கட்சிகளும் ஒரே அணியில் உள்ளன. என்றாலும் பா.ஜ., நல்ல வளர்ச்சி பெற்று ஓட்டு சதவீதம் படிப்படியாக அதிகரித்து, தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது.
இடைத்தேர்தலில் முதலிடத்துக்கு செல்ல பா.ஜ., கடும் முயற்சி செய்யும் அதே நேரத்தில், இருந்த இடத்தை விட்டு விடக்கூடாது என்பதில் காங்கிரசும் தீவிரமாக உள்ளது.
வாசகர் கருத்து