தேர்தல் பத்திரம்: தி.மு.க.,வுக்கு வாரிக் கொடுத்த 'லாட்டரி' மார்ட்டின்

தேர்தல் பத்திரங்கள் தொடர்பான புதிய தரவுகளை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது. இதில், லாட்டரி அதிபர் மார்ட்டினிடம் இருந்து 509 கோடி ரூபாயை தி.மு.க., பெற்றுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தல் பத்திரங்கள் மூலம் நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் பெற்றுள்ள நன்கொடை தரவுகள், தேர்தல் கமிஷனின் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஏப்ரல் 2019 முதல் பிப்ரவரி 2024 வரையிலான தேர்தல் பத்திர தரவுகளை கடந்த 12ம் தேதி தேர்தல் கமிஷனனிடம், எஸ்.பி.ஐ., ஒப்படைத்தது. இந்த விவரங்களை மார்ச் 15ம் தேதிக்குள் இணையத்தில் பதிவேற்றுமாறு தேர்தல் கமிஷனுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், உச்ச நீதிமன்றம் விதித்த காலக்கெடுவுக்கு ஒருநாள் முன்னதாகவே தேர்தல் கமிஷனின் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் நன்கொடை பெற்ற அரசியல் கட்சி, நன்கொடை வழங்கியவரின் பெயர், எந்த தேதியில் தேர்தல் பத்திரங்களை பணமாக மாற்றினார்கள் என்ற விவரங்களை வெளியிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அ.தி.மு.க..,வுக்கு 6 கோடி

தற்போது புதிய தரவுகளை தனது இணையத்தளத்தில் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதில், கோவையை சேர்ந்த லாட்டரி அதிபர் மார்ட்டினின் பியூச்சர் கேமிங் நிறுவனத்திடம் இருந்து மட்டும் ரூ.509 கோடியை தி.மு.க., பெற்றுள்ள விவரம் வெளிவந்துள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் தி.மு.க., பெற்ற 656.5 கோடி ரூபாயில் மார்ட்டின் மட்டுமே ரூ.509 கோடி ரூபாயை வழங்கியுள்ளார்.

அதேநேரம், தேர்தல் பத்திரங்களின் மூலம் ரூ.6 கோடி ரூபாயை அ.தி.மு.க., வாங்கியுள்ளது. அதில், சென்னை சூப்பர் கிங்ஸ் நிறுவனம் மட்டும் 4 கோடி ரூபாயை கொடுத்துள்ளது. கோவையை சேர்ந்த எல்எம்டபிள்யூ நிறுவனம், 1 கோடி ரூபாயை கொடுத்துள்ளது.

மொத்தமாக கணக்கிட்டால், தேர்தல் பத்திரங்கள் மூலம் பா.ஜ., 6,986 கோடி ரூபாயை பெற்றுள்ளது. காங்கிரசுக்கு 1,334.35 கோடியும் பிஜு ஜனதா தளம் 944 கோடியும் தெலுங்கு தேசம் கட்சி 181.35 கோடி ரூபாயையும் தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்றுள்ளன.

திரிணமுல் காங்கிரசுக்கு 1,397 கோடியும் தெலங்கானாவின் பிஆர்எஸ் கட்சிக்கு 1,322 கோடியும் கிடைத்துள்ளது. இதில், தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக நன்கொடை கொடுத்தவர்களில் லாட்டரி மார்ட்டின் பிரதான இடத்தில் உள்ளார். அவரின் பியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் நிறுவனம், 1368 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளது.

தேர்தல் பத்திரங்கள் நன்கொடை கொடுத்த முதல் 30 நிறுவனங்களில் 14 நிறுவனங்கள் மத்திய புலனாய்வு அமைப்புகளின் விசாரணையை எதிர்கொண்டு வருகின்றன.

ஸ்டாலின் விளக்கம்

முன்னதாக, தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெற்றது தொடர்பாக பேட்டி அளித்த ஸ்டாலின், "தேர்தல் பத்திரத்தைப் பொறுத்தவரையில், நாங்கள் நிதி திரட்டுவதும் அது குறித்த கணக்குகளை முறையாகத் தணிக்கை செய்வதும் வழக்கமான ஒன்று. இப்போதும் அதே வெளிப்படைத்தன்மையுடன்தான் தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி திரட்டியிருக்கிறோம்" என்றார்.

லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள தரவுகள் மூலம், தி.மு.க.,வுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்