தேர்தல் பத்திரங்கள் மூலம் 656 கோடி நிதி : ஸ்டாலின் சொன்ன விளக்கம்

"தேர்தல் பத்திரத்தைப் பொறுத்தவரையில், நாங்கள் நிதி திரட்டுவதும் அது குறித்த கணக்குகளை முறையாகத் தணிக்கை செய்வதும் வழக்கமான ஒன்று" என, முதல்வர் ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார்.
அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:
மாநில உரிமைகளைப் பறிக்கும் பா.ஜ.,வின் முதன்மை இலக்கு, இந்தியாவில் மாநில அரசுகளே இருக்கக்கூடாது என்பதுதான். பா.ஜ., ஆட்சி செய்யும் மாநிலங்களை இரட்டை என்ஜின் அரசு என்று அவர்கள் வர்ணிப்பதன் மூலமே, பா.ஜ., ஆட்சியில்லாத மாநில மக்களின் நலன்களைப் புறக்கணிப்பதைப் புரிந்துகொள்ளலாம்.
அதிலும் தமிழ்நாட்டில் பா.ஜ.க. ஒருபோதும் ஆட்சி அமைக்க முடியாது என்பதால் முற்றிலுமாகப் புறக்கணிக்கும் போக்கு தொடர்கிறது. இதன் மூலமாக, மக்களுக்கு மாநில அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத சூழலை உருவாக்கி, தேர்தல் களத்தில் விமர்சனம் செய்யலாம் என்பது பா.ஜ.,வின் கணக்கு. ஆனால், அது தப்புக் கணக்காகத்தான் முடியும்.
பா.ஜ..,வுக்கு எந்தக் காலத்திலும் தமிழக மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். பா.ஜ.,வுக்கு அளிக்கும் வாக்கு, தமிழகத்தின் வளர்ச்சிக்கு வைக்கும் வேட்டு என்பது மக்களுக்கு நன்கு தெரியும். மத்திய அரசின் எந்த வளர்ச்சித் திட்டத்தை மாநில அரசு தடுத்து நிறுத்தியது என விளக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு இதுவரை பதில் கூறவில்லை.
தி.மு.க., வாரிசு கட்சியா?
தி.மு.க.வை வாரிசு கட்சி என்று விமர்சனம் செய்கிறார்கள். மாற்றுக் கட்சியில் இருப்பவர்கள் நம்மை விமர்சனம் செய்யும்போது ஒரு சில பொய்களை, தவறான தகவல்களை வெளியிடுவது உண்டு. ஆனால், பிரதமர் போன்ற மிக உயர்ந்த பொறுப்பில் இருப்பவர்கள் அப்படிச் செயல்படமாட்டார்கள்.
நேரு முதல் மன்மோகன் சிங் வரை பிரதமர்கள் அப்படித்தான் இருந்தார்கள். ஆனால், நரேந்திர மோடியும் அவரது பா.ஜ., நிர்வாகிகளும் தவறான தகவல்களைச் சொல்பவர்களாகவும், வதந்திகளை வாட்ஸ்ஆப் வழியாகப் பரப்புகிறவர்களாகவும் இருக்கிறார்கள்.
இதையே முழு நேரத் தொழிலாகக் கொண்டிருக்கிற பா.ஜ., நிர்வாகிகளும் உண்டு. அவை குறித்து, கேள்வி எழுப்பினால் பதில் இருக்காது. இன்னொரு வதந்திக்கோ, விமர்சனத்திற்கோ தாவி விடுவார்கள்.
மத்திய அரசின் எந்தத் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு முடக்கியது என்று கேட்டால் அதற்குப் பதில் வராது. காரணம், மத்திய அரசின் பங்களிப்போடு நடைபெறும் பிரதமரின் வீடு கட்டும் திட்டம், ஜல்ஜீவன் திட்டம் உள்ளிட்ட அனைத்திலும் தமிழக அரசு தன் பங்களிப்பைக் கூடுதலாக செலுத்தி, சிறப்பாக நிறைவேற்றி அதற்காக விருதுகளையும் பெற்றுள்ளது.
இது பிரதமர் தொடங்கி பா.ஜ., நிர்வாகிகள் அனைவருக்கும் தெரியும். அதனால்தான் தி.மு.க. மீது வாரிசு அரசியல், ஊழல் முறைகேடு என்று திசைதிருப்பும் விமர்சனங்களை வைப்பது வழக்கமாகிவிட்டது.
நான் கருணாநிதியின் மகன். மகன்தான். அவருடைய கொள்கை வாரிசுதான். அந்த அடிப்படையில்தான் மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து முதல்வராக தேர்ந்தெடுத்துள்ளார்கள். பா.ஜ.க. வெளியிட்டுள்ள நாடாளுமன்றத் தேர்தல் பட்டியலில் இடம்பெற்றுள்ள வாரிசுகளுக்கு பிரதமரும் அவரது கட்சி நிர்வாகிகளும் என்ன பதில் சொல்லப்போகிறார்கள்?
போதைப் பொருள் விவகாரத்தைப் பொறுத்தவரை, குட்கா ஊழலில் தனது அமைச்சர் மீதும், காவல்துறை தலைவர் மீதும் நேரடியாக குற்றம்சாட்டப்படும் அளவில் ஆட்சி நடத்தியவர்தான் பழனிசாமி. கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கமும் அவரது ஆட்சியில்தான் அதிகமாயின.
போதைப்பொருள் நடமாட்டம்
ஜெயலலிதா ஆட்சியிலேயே கஞ்சா-ஹெராயின் வழக்குகள் போடப்பட்டதையும், அவை எப்படிப்பட்டவை என்பதையும் நாடறியும். அதனால், பழனிசாமியின் கட்சியினர் நடத்திய மனித சங்கிலி போராட்டம் என்பது தேர்தல் நேர ஸ்டண்ட்.
பா.ஜ., ஆட்சி செய்யும் குஜராத் தான் போதை மருந்துகளின் தலைநகரமாக உள்ளது என்பதைப் பல புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. அண்மையில், பழனிசாமியும் அதே குற்றச்சாட்டை சொல்லியிருக்கிறார். இந்த இரண்டு கட்சிகளும்தான் போதைப் பொருள்களுக்கு வித்திட்ட கட்சிகள்.
ஜாபர் சாதிக் விவகாரத்தில் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தி.மு.க. மீதுஅவதூறு பரப்பினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும்.
மாயபிம்பம்
இந்தியா முழுவதும் மோடி தலைமையிலான அரசின் பத்தாண்டுகால ஆட்சியின் அவலங்களும் அதனால் அதிருப்திகளும் வெளிப்பட்டு வருகின்றன. அது தேர்தல் களத்தில் நிச்சயம் எதிரொலிக்கும்.
தமிழகத்தில் பா.ஜ., வளர்ந்துவிட்டதாக மாய பிம்பத்தைக் கட்டமைக்க நினைக்கிறார்கள். மலருமா கவிழுமா என்ற உண்மையைத் தேர்தல் முடிவுகள் காட்டிவிடும்.
தி.மு.க., வாங்கிய நிதி
தேர்தல் பத்திரத்தைப் பொறுத்தவரையில், நாங்கள் நிதி திரட்டுவதும் அது குறித்த கணக்குகளை முறையாகத் தணிக்கை செய்வதும் வழக்கமான ஒன்று. இப்போதும் அதே வெளிப்படைத்தன்மையுடன்தான் தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி திரட்டியிருக்கிறோம்.
ஆனால், தி.மு.க உள்ளிட்ட கட்சிகளின் செயல்பாடுகளைக் குறையாக, குற்றமாகச் சொல்லிக்கொண்டிருந்த பா.ஜ.,வின் செயல்பாடு என்ன என்பதும், அது யார்... யாரிடம் எதற்காக நெருக்கடி கொடுத்து தேர்தல் நிதியைப் பெற்றுள்ளது என்பதும் கவனத்திற்குரியது. கையும் களவுமாக சிக்கியுள்ளது பா.ஜ.க.
வாசகர் கருத்து