நெல்லையில் தி.மு.க., புதுமுகம்: கடைசி வரை தாக்குப்பிடிப்பாரா?
திருநெல்வேலி தொகுதி தற்போதைய தி.மு.க., - எம்.பி., ஞானதிரவியம் பள்ளி படிப்பை தாண்டாதவர். கட்சியில் மாவட்ட பொருளாளராகவும் இருந்தார்.
தொகுதி நிதியைத் தவிர, வேறு சிறப்பான திட்டங்கள் எதற்கும் முயற்சிக்கவில்லை. கல்குவாரி விஷயத்தில் கலெக்டர் மற்றும் அதிகாரிகளுடன் மோதலை ஏற்படுத்தி கொண்டதோடு, கட்சிக்கே அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாக லோக்கலில் அதிரடி காட்டியதால், மீண்டும் அவருக்கு 'சீட்' தர வேண்டாம் என்ற முடிவுக்கு கட்சித் தலைமை வந்து விட்டதாகத் தெரிகிறது.
இதையடுத்து, நெல்லை தொகுதிக்கு புதிய வேட்பாளரை நிறுத்த கட்சித் தலைமை முடிவெடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்போதைக்கு வேட்பாளர் பட்டியலில் முன்னணியில் இருப்பவர் கட்சியின் அவைத் தலைவராக உள்ள கிரகாம்பெல். 2006ல் இவர் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினராக தேர்வானார்.
அன்றைய முதல்வர் கருணாநிதி, மாவட்ட பஞ்சாயத்து தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு சில மாவட்டங்களை ஒதுக்கி தந்திருந்தார். அதன்படி, இ.கம்யூ., தலைவர் நல்லகண்ணு வேண்டுகோளின் பேரில் மாவட்ட கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்ட சிவகாமி சுந்தரி, நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவராக தேர்வாவதற்கு, தி.மு.க., தலைமை பரிந்துரைத்தது.
ஆனால் அப்போது தி.மு.க., மாவட்டச் செயலரான கருப்பசாமி பாண்டியன் மற்றும் அப்பாவு ஆகியோர் அதைத் தட்டிப்பறித்து, தி.மு.க.,வின் கிரகாம்பெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் ஆக்கினர்.
ஏமாற்றப்பட்ட சிவகாமி சுந்தரி, தேர்தல் நடந்த மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து கண்ணீர் மல்க வெளியேறியதை அன்று பலரும் பரிதாபத்தோடு பார்த்தனர்.
மாவட்ட பஞ்சாயத்து தலைவரான கிரகாம்பெல், பின் நடந்த தேர்தல்களில் எம்.எல்.ஏ., - எம்.பி., சீட்டு கேட்டு முயற்சித்தார். ஆனால், கைகூடவில்லை. நீண்ட நாள் போராட்டத்துக்கு கிடைத்த பலனாக, வரும் லோக்சபா தேர்தலில் அவர் வாய்ப்பு பெறக்கூடிய சூழல் உருவாகி இருக்கிறது.
நாடார் இனத்தைச் சேர்ந்த கிரகாம்பெல், தன் பெயரிலும் குடும்பத்தினர் பெயரிலும் பல்வேறு கல்குவாரிகள், லாரிகள் என பல தொழில்கள் செய்து வருகிறார்.
தி.மு.க.,வில் அவருக்கு எதிராக களம் அமைக்கும் சிலர், கிறிஸ்துவ நாடாரான 'பாரத் ஸ்கேன்' நிறுவனம் நடத்தி வரும் இமானுவேல் என்பவரை முன்னிலைப்படுத்தி வேட்பாளராக்கும் தீவிரத்தில் உள்ளனர்.
சிவகாமி சுந்தரியின் வாய்ப்பை கிரகாம்பெல் தட்டி பறித்ததை போல, தற்போது கிரகாம்பெல்லின் வாய்ப்பை கடைசி நேரத்தில் இமானுவேல் தட்டிப் பறிப்பாரா என்பதைப் பார்க்க நெல்லை தி.மு.க.,வில் ஆர்வமாகஉள்ளனர்.
வாசகர் கருத்து