களமிறங்கும் புதிய வீடியோகிராபர்கள்: குழு விதிமீறல்களை செய்து இனி தப்பிக்க முடியாது!
மத்திய தேர்தல் ஆணையம் சார்பில் ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் பறக்கும் படை, வீடியோ கண்காணிப்பு குழு, நிலை கண்காணிப்பு குழு என, 3 குழுக்களை அமைக்கப்படும். தலா, 8 மணி நேரம் வீதம், 3 ஷிப்டுகளில் இக்குழுக்கள், 24 மணி நேரமும் தனித்தனியாக செயல்படும். மொத்தம், 80 குழுக்கள் வரை பணி செய்வர்.
வாகன தணிக்கை, கட்சி நிகழ்ச்சி, மேடை மற்றும் அரங்க நிகழ்ச்சிகள், தகவலின் பேரில் சோதனை, வேட்பு மனு தாக்கல் முதல் ஓட்டுப்பதிவு போன்ற பணிகளை செய்வர்.
கடந்த தேர்தல்களில், அந்தந்த மாவட்ட வீடியோகிராபர்கள், போட்டோகிராபர்கள் அசோசியேஷன் மூலமும், தனிப்பட்ட முறையில் வீடியோ கேமரா வைத்திருப்போரையும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரே நியமித்து, அன்றைய பதிவை பெற்றுக் கொண்டு விடுவிப்பார்.
வீடியோ கண்காணிப்புக் குழுவில் மாவட்ட அதிகாரிகள் இருந்தாலும், கேமராமேன் முக்கியமானவர். இவர் உள்ளூர் ஆள் என்பதால் கட்சியினர் 'சரிக்கட்டி', கண்காணிப்புக் குழுக்கள் எங்கு செல்கின்றன, வீடியோவில் சிக்கிய வில்லங்கமான விஷயங்கள் என அனைத்தையும் கேட்டுத் தெரிந்து கொண்டு உஷாராகி விடுவர்.
இந்த முறை, வீடியோ கேமராமேன், போட்டோகிராபர்களைத் தேர்வு செய்ததில், மத்திய தேர்தல் ஆணையமே களமிறங்கியது.
சென்னையில் கடந்த ஜன., 18 ல் ஒப்பந்தம் மூலம், 4 மாவட்டங்களுக்கு ஒரு பெரிய நிறுவனம் என்ற கணக்கில் தேர்வு நடைபெற்றது. இந்த நிறுவனங்களே, வீடியா எடுக்க ஆட்கள், அவர்களுக்கு கேமராக்களை வழங்கி விடும்.
இந்த வீடியோகிராபர்கள் வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களின் பெயர்கள், போன் எண்கள் என எந்த விபரங்களும் கட்சிகளுக்குத் தெரியாது.
தேர்வு செய்யப்பட்ட புதிய வீடியோகிராபர்கள் நேற்று முன்தினம், அந்தந்த மாவட்டங்களில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இதுபற்றி, வீடியோகிராபர்கள் கூறியதாவது:
எங்கள் வீடியோ கேமராவில் எந்த பதிவும் இருக்கக்கூடாது. 'இன்பில்டு மெமரி' அல்லது பிற மெமரி கார்டுகள் மூலம் நாங்கள் எதையும் பதிவு செய்யக்கூடாது.
தேர்தல் ஆணையம் மூலம் வழங்கும் கார்டில் பதிவு செய்து, 8 மணி நேர பணி முடிந்ததும், உரிய அலுவலரிடம் கார்டை வழங்கிவிட்டு செல்ல வேண்டும். அவர்கள் உத்தரவின்படி, பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அவர்களே மொபைல் போன் சிம்கார்டு தருகின்றனர். அதை மட்டும் பயன்படுத்த வேண்டும். தேர்தல் பணி தவிர, பிற பணிக்கு அந்த எண்ணை பயன்படுத்தக் கூடாது. யாருக்கும் பேசவோ, தகவல் தெரிவிக்கவோ கூடாது. வீடியோ பதிவுகளை காப்பி செய்வது கூடாது; பிற பயன்பாட்டுக்கு எடுக்கக்கூடாது.
சுழற்சி முறையில் பணி என்பதால், சில மணிநேரத்துக்கு முன்பே பணி நேரம், எந்த டீமில் செல்கிறோம் என்பது தெரியும்.
தேர்தல் நேரத்தில் பதற்றமான தொகுதி, தேர்தல் பார்வையாளர்கள், தேர்தல் ஆணைய உயரதிகாரிகள் ஆய்வு, பிரதமர், முதல்வர் போன்ற வி.வி.ஐ.பி., விசிட், மேடை நிகழ்ச்சிகளுக்கு தனி நபர் வந்து வீடியோ பதிவு செய்வார்களாம். வேறு புதிய தகவல்கள், அவ்வப்போதுதருவதாக கூறி உள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
புதிய வீடியோகிராபர்கள் யார் என தெரியாததால் அவர்களை 'சரிக்கட்ட முடியவில்லையே' என கடந்த 2 நாட்களாக பல கட்சிகளையும் சேர்ந்த முக்கிய புள்ளிகள் புலம்பி வருகின்றனர்.
வாசகர் கருத்து