ஸ்டாலின். சுயபரிசோதனை செய்து கொள்ளட்டும்: அண்ணாமலை
"கச்சத்தீவு குறித்து தி.மு.க., தலைவர் ஸ்டாலின், சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நேரம் இது" என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
கன்னியாகுமரியில் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "மீனவ மக்கள் தொடர்ந்து தண்டிக்கப்படுவதற்கு காரணம் தி.மு.க.,வும் காங்கிரசும் சேர்ந்து கச்சத்தீவை தாரை வார்த்தது தான். இனியும் மக்கள் அவர்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். காங்கிரசும் தி.மு.க.,வும் அவர்களுக்கு செய்த பாவத்துக்கு பதில் சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது" என விமர்சித்திருந்தார்.
இதற்குப் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், "கச்சத் தீவை மீட்பதற்கு கடந்த 10 ஆண்டுகளாக பா.ஜ., அரசு என்ன செய்தது. விஷ்வ குரு என மார்தட்டிக் கொள்ளும் பிரதமர், மவுன குருவாக இருப்பது ஏன்?" என கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில், தமிழக முதல்வரின் கருத்தை விமர்சித்து, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் கடந்த 1974ம் ஆண்டு தி.மு.க., ஆட்சியில் இருந்தபோது, மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசால், இலங்கைக்கு கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது. அதன் பிறகு பலமுறை, மத்திய அரசில் அமைச்சர் பதவிகளை மட்டும் வாங்கிக் கொண்டு, கச்சத்தீவு விவகாரத்தில் தி.மு.க., கள்ள மவுனம் சாதித்தது.
தி.மு.க.,வுக்கு தேர்தல் காலங்களில் மட்டுமே ஞாபகம் வருவது விந்தை. கச்சத்தீவு விஷயத்தில் தி.மு.க.,வின் மறைந்த தலைவர் கருணாநிதி செய்தது துரோகம்.
இலங்கைப் போரின்போது, ஆளுங்கட்சியாக இருந்த தி.மு.க., நடத்திய மூன்று மணிநேர உண்ணாவிரதம் உள்ளிட்ட கபட நாடகங்களை மக்கள் மறந்துவிட்டார்கள் என்று ஸ்டாலின் நினைத்து கொண்டிருக்கிறார்.
அதன் பின்னர்தான் நமது மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும், கைது செய்வதும் மிகவும் அதிகரித்தது. தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது, இலங்கை கடற்படையினரால், 80க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டபோது, ஊழல் செய்வதில் மும்முரமாக இருந்தது, தி.மு.க.,
கடந்த 2014ம் ஆண்டு, இலங்கை அரசால் தமிழக மீனவர்களுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட போது, தி.மு.க., அன்றும் மௌனமாக தான் இருந்தது. அவர்களை பத்திரமாக மீட்டது, மோடி அரசு.
மோடி பொறுப்பேற்ற பிறகு இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்படும் மீனவர்கள், உடனுக்குடன் மீட்கப்படுகிறார்கள். அவர்கள் உயிருக்கு எந்த ஆபத்தும் நேராமல், சட்டப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கச்சத்தீவை விட்டுக் கொடுத்து, தமிழக மீனவர்கள் வாழ்வாதாரத்தை பாதிப்புக்கு உள்ளாக்கிவிட்டு, தேர்தல் நேரத்தில் மட்டும் கச்சத்தீவு குறித்துப் பேசும் ஸ்டாலின், சுயபரிசோதனை செய்ய வேண்டிய நேரம் இது.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
வாசகர் கருத்து