மதுரை, திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்கள் யார் : மா.கம்யூ., அறிவிப்பு
லோக்சபா தேர்தலில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்களை மா.கம்யூ., அறிவித்துள்ளது. அதன்படி, மதுரையில் சு.வெங்கடேசனும் திண்டுக்கல்லில் சச்சிதானந்தமும் போட்டியிட உள்ளனர்.
லோக்சபா தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் மா.கம்யூ., கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில், மா.கம்யூ., கட்சிக்கு சிட்டிங் தொகுதியான கோவை ஒதுக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக மதுரையும் தி.மு.க.,வின் சிட்டிங் தொகுதியான திண்டுக்கல்லும் ஒதுக்கப்பட்டன. கோவையில் இந்தமுறை தி.மு.க., நேரடியாக களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, மா.கம்யூ., சார்பில் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடந்தன. மதுரையில் சு.வெங்கடேசனே மீண்டும் களமிறங்குவார் என பேசப்பட்டது.
திண்டுக்கல் தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ., பாலபாரதி, மாநில செயற்குழு உறுப்பினர் பாண்டி, மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாக கூறப்பட்டது.
இதில், 'இரண்டு முறைக்கு மேல் போட்டியிட்டவர்களுக்கு வாய்ப்பு வழங்கக்கூடாது என்ற விதி இருப்பதால், பாலபாரதிக்கு வாய்ப்பு குறைவு' என பேசப்பட்டது. இதையடுத்து, பாண்டி அல்லது சச்சிதானந்தம் ஆகியோர் போட்டியில் உள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், மதுரை தொகுதியில் சு.வெங்கடேசனும் திண்டுக்கல்லில் சச்சிதானந்தமும் போட்டியிட உள்ளதாக மா.கம்யூ., கட்சி அறிவித்துள்ளது.
வாசகர் கருத்து