லோக்சபா தேர்தலில் போட்டியா : விஜயதரணி பதில்
''காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை. இதனால், பல பெண்கள் அக்கட்சியில் இருந்து விலகுகின்றனர்" என, விஜயதரணி தெரிவித்தார்.
விஜயதரணி கூறியதாவது:
தமிழக அரசின் மகளிர் உரிமை தொகை திட்டம் தகுதியுள்ள பெண்களுக்கு இன்னும் சென்று சேரவில்லை. அதில், தி.மு.க.,வை சேர்ந்தவர்களுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. காங்கிரசில் பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை. இதனால், பல பெண் நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகுகின்றனர்.
பா.ஜ.,வில் எனக்கு நல்ல பொறுப்பை கொடுத்து அங்கீகாரம் தருவார்கள். கட்சியில் உள்ள பெண்களை களப்பணியில் ஈடுப்படுத்துவதே பா.ஜ.,வின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. பிரதமர் மோடியின் கரத்தை வலுப்படுத்துவதற்கு வந்துள்ளோம். மக்கள் பணியில் எந்தவித பாரபட்சமும் பா.ஜ., காட்டுவதில்லை.
பணம் இருப்பவர்கள் தான் காங்கிரசில் இருக்க முடியும். ஆனால், பா.ஜ.,வில் அப்படியல்ல. மூன்றாவது முறையாக மோடி தான் ஆட்சிக்கு வரப்போகிறார். தமிழகத்தில் பா.ஜ., வென்றால் இங்குள்ள மக்களுக்கு கூடுதல் பலன்கள் கிடைக்கும்.
எம்.எல்.ஏ., பதவிக்கு நான் போட்டியிடப் போவதில்லை. வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சி தலைமை முடிவு செய்தால் போட்டியிடுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து