'டாப்'பில் இளைஞர் அணி : தடுமாற்றத்தில் மா.செ.,க்கள்
தமிழகத்தில் காங்., - வி.சி., - ம.நீ.ம., உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு ஓய்ந்த நிலையில், தி.மு.க., களம் இறங்கவுள்ள 21 லோக்சபா தொகுதிகளில் உதயநிதியின் இளைஞரணி 'கோட்டா' டாப்பில் இருப்பதாகவும், கட்சியின் பவர்புல்' பதவியாக பார்க்கப்பட்ட மா.செ.,க்களின் பாடு திண்டாட்டமாக மாறிவிட்டதாகவும் புலம்புகின்றனர்.
தி.மு.க., நேரடியாக 21 தொகுதிகளில் போட்டியிடுவதை அடுத்து, அவற்றைக் கைப்பற்ற முதல்வர் ஸ்டாலின், கட்சியின் சீனியர்கள், உதயநிதி என பல கோட்டாக்களில் நிர்வாகிகளின் காய் நகர்த்துதல்கள் களைகட்ட ஆரம்பித்துவிட்டன.
அவற்றில், உதயநிதி கோட்டா தான் தற்போது டாப்பில் உள்ளது. கட்சியில் இரண்டாம் கட்ட தலைவர்களை உருவாக்குவதில் உதயநிதி மும்முரமாக உள்ளார்.
இளைஞர் அணியினருக்கும், தனக்கு விசுவாசமாக உள்ள சீனியர்களின் வாரிசுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க நினைக்கிறார். 21 தொகுதிகளில் ஒன்பது தொகுதிகள் வரை இளைஞர் அணிக்கும், தன் விசுவாசிகளுக்கும் வாங்கிக் கொடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
இதற்காக இளைஞரணி துணை செயலர்கள் ஒன்பது பேர் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் படித்த இளைஞர், கட்சிக்கு விசுவாசமாக உள்ளவர், அவர்கள் பொருளாதார நிலை உள்ளிட்ட பல பிரிவுகளில் ஏற்கனவே 'லிஸ்ட்' எடுத்தும் வைத்து விட்டார்.
கூடுமானவரையில் இந்த தேர்தலில் அவர்களை இறக்கிவிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேநேரம் இத்தகவல் அறிந்த மா.செ.,க்கள் கடும் மன வருத்தத்தில் உள்ளனர்.
அவர்கள் கூறியதாவது:
கட்சியின் தலைவராக கருணாநிதி இருந்த வரை ஒரு மாவட்டத்தில் கட்சி, தனியார் என எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் அவர் முதலில் தேடுவது மா.செ.,வாக இருக்கும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டாம் கட்டத் தலைவர்கள் கோலோச்சிய காலம் அது. எம்.எல்.ஏ., - எம்.பி., உள்ளாட்சி பிரதிநிதிகள் என, எந்த பதவிக்கும் மா.செ.,வின் பரிந்துரை இல்லாமல் கட்சி தலைமை அலுவலகத்திற்குள் சென்றுவிட முடியாது.
ஆனால், கட்சித் தலைமை என்ன நினைக்கிறதோ, அதை மா.செ.,க்கள் செயல்படுத்த வேண்டும் என காவல் துறையில் பின்பற்றப்படும் 'ஒபே த ஆர்டர்' பாணி தான் தற்போது நடக்கிறது. பொதுச்செயலரான அமைச்சர் துரைமுருகன் போன்ற சில சீனியர்களுக்கு மட்டும் கொஞ்சம் விதிவிலக்கு.
இருந்தாலும், உதயநிதி என்ட்ரிக்கு பின் துரைமுருகனும், 'கட்சியின் உயர்ந்த பொறுப்புக்கு தகுதியானவர் உதயநிதி. தாத்தாவை போல் பேரனும் சாதனை படைப்பார். அவரது வேகம் கட்சிக்கு தேவை. கருணாநிதி, ஸ்டாலின் இருவரையும் துாக்கி சாப்பிடக்கூடியவர் உதயநிதி' என்றெல்லாம் புகழ்மாலை சூட்ட ஆரம்பித்து விட்டார்.
இந்த தேர்தலில் பெரும்பாலான மா.செ.,க்களின் பரிந்துரைகள் எடுபடவில்லை. அதேநேரம், 'நாங்கள் கைகாட்டி களமிறக்கும் வேட்பாளர்களை ஜெயிக்க வைத்து கொண்டு வாருங்கள்; இல்லை என்றால் உங்கள் பதவி கேள்விக்குறி தான்' என தலைமை எச்சரித்துள்ளது வருத்தமாக உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாசகர் கருத்து