தி.மு.க.,வை களங்கப்படுத்தும் பா.ஜ., : அமைச்சர் ரகுபதி
"ஜாபர் சாதிக் உடன் தொடர்பில் இருந்தது, பா.ஜ., மற்றும் அ.தி.மு.க.,வினர் தான். நாங்கள் ஜாபர் சாதிக்கை அடிப்படைஉ றுப்பினர் பொறுப்பில் இருந்தே நீக்கிவிட்டோம்" என, தமிழக சட்ட அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ரகுபதி கூறியதாவது:
என்.சி.பி., மூலமாக தி.மு.க.,வை மிரட்டப் பார்க்கிறார்கள். தி.மு.க., களங்கப்படுத்த என்.சி.பி., பிரிவை பா.ஜ., ஏவியுள்ளது. தமிழகத்தில் பா.ஜ., அரசியல் எடுபடாது. தி.மு.க.,வுக்கு வரக் கூடிய அனைவரின் பின்னணியை சோதித்துப் பார்ப்பது இயலாத ஒன்று. கட்சியினர் தவறு செய்வது தெரியவந்தால் கட்சித் தலைமை உடனே நடவடிக்கை எடுக்கிறது.
சட்டவிரோத செயல்களுக்கு துணை போகிறவர்களை. கட்சிக்குள் வைத்திருக்க மாட்டோம். இந்தியாவில் போதைப் பொருள் நடமாட்டத்துக்கு முக்கிய காரணமே, குஜராத்தில் உள்ள முந்த்ரா துறைமுகம் தான்.
'ஜாபர் சாதிக் மீது பிப்ரவரி 15ம் தேதி 'லுக் அவுட்' நோட்டீஸ் பிறப்பித்தோம். தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தோம்' என்கின்றனர். ஆனால், 21ம் தேதி 'மங்கை' என்ற பட விழாவில் அவர் கலந்து கொண்டுள்ளார். அப்போது என்.சி.பி., எங்கே போனது?
2013ல் அவர் மீது ஒரு வழக்கு வந்தது. அந்த வழக்கை, அ.தி.மு.க., ஆட்சியில் ஒழுங்காக நடத்தவில்லை. அன்றைக்கு வழக்கை நடத்தியது, பா.ஜ., வழக்கறிஞர் அணியை சேர்ந்த ஒருவர் தான். அன்றைக்கு ஜாபர் சாதிக்கை காப்பாற்றியது அதிமுக ஆட்சி.
ஜாபர் சாதிக் உடன் தொடர்பில் இருந்தது, பா.ஜ., மற்றும் அ.தி.மு.க.,வினர் தான். நாங்கள் ஜாபர் சாதிக்கை அடிப்படைஉ றுப்பினர் பொறுப்பில் இருந்தே நீக்கிவிட்டோம். போதைப் பொருளுக்கு எதிரான தி.மு.க.,வின் நடவடிக்கையை நீதிமன்றமே பாராட்டியிருக்கிறது.
இவ்வாறு ரகுபதி தெரிவித்தார்.
வாசகர் கருத்து