தி.மு.க., கூட்டணியை தேர்வு செய்தது ஏன் : வீடியோ வெளியிட்ட கமல்
தி.மு.க., கூட்டணியில் இணைந்தது குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'நாடு உள்ள நிலைமையில் எதிர்க்கட்சிகளுடன் கைகோர்ப்பதற்கு துணிச்சல் வேண்டும்' என, கமல் தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீடு முடிவடைந்துவிட்டன. கடந்த லோக்சபா தேர்தலின் போது, தி.மு.க., கூட்டணியில் அங்கம் வகித்த கட்சிகளுக்கு அதே எண்ணிக்கையில் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மக்கள் நீதி மய்யமும், தி.மு.க., கூட்டணியில் 2 லோக்சபா தொகுதிகளையும் ஒரு ராஜ்யசபா சீட்டையும் எதிர்பார்த்தது. ஆனால், கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்க வேண்டிய சூழலை விவரித்த தி.மு.க., தலைமை, 'ராஜ்யசபா சீட்டை ஒதுக்குகிறோம்' எனக் கூற, அதையேற்று, ஒப்பந்தத்தில் நடிகர் கமல்ஹாசன் கையொப்பமிட்டார்.
விமர்சித்த அண்ணாமலை
கமலின் இந்த முடிவு, அரசியல் வட்டாரத்தில் விவாதமாக மாறியிருக்கிறது. இது குறித்து இன்று (மார்ச் 10) செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, "தமிழகத்தில் இரண்டு கட்சிகளுக்கு மத்தியில் செயல்படுவது எவ்வளவு கஷ்டம் என்பதை கமலின் முடிவு வெளிக்காட்டியுள்ளது.
2021 சட்டசபை தேர்தலில் யாரை எதிர்த்து கமல் பிரசாரம் செய்தாரோ, இன்று அவர்களுடன் கூட்டணிக்கு சென்றுள்ளார். அவர்கள் ஓட்டு போட்டு தான் கமல் எம்.பி., ஆக தேர்வாக போகிறார்" என, விமர்சித்தார்.
விளக்கம் கொடுத்த கமல்
இந்நிலையில், தி.மு.க., கூட்டணியில் இணைந்தது குறித்து வீடியோ ஒன்றை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், 'இன்று நாடு உள்ள நிலையை பார்த்து எதிர்க்கட்சிகளுடன் கரம் கோர்ப்பதற்கு துணிச்சல் வேண்டும். இது ஒரு அவசர நிலை. தமிழகத்துக்கும் தேசத்துக்கும் பயன் உள்ளதாக அமைய வேண்டும். இந்திய நாடு, மதவாத சக்திகளுக்கு கைகூடிவிடக் கூடாது என்பதற்காக நாங்கள் எடுத்த முடிவு இது.
எந்தக் கட்சியில் இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் இப்படியொரு சூழலில் அனைவரும் சகோதரர்கள் தான். இந்தியாவின் பன்முகத்தன்மையை நம்புகிறேன். நாம் அனைவரும் தேசத்துக்காக ஒரே மேடையில் அமரவேண்டும். அது தான் எனது அரசியல்.
இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து