தேர்தலில் போதை பணம்: தி.மு.க., மீது பழனிசாமி குற்றச்சாட்டு
போதைப் பொருள் கடத்தலில் கிடைத்த பணத்தை, லோக்சபா தேர்தலில் தி.மு.க., பயன்படுத்த உள்ளதாக, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி குற்றம் சுமத்தியுள்ளார்.
டில்லியில் இருந்து போதைப் பொருள்களை வெளிநாடுகளுக்கு கடத்திய வழக்கில், தி.மு.க., அயலக அணியின் முன்னாள் நிர்வாகியான ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார். இது குறித்து, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம், இன்று காலை அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி மனு ஒன்றை அளித்தார்.
ஆளுநர் உடனான சந்திப்புக்குப் பின், பழனிசாமி கூறியதாவது:
போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளால், தி.மு.க., நிர்வாகி ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக பல தகவல்கள் வெளிவந்துள்ளன. கடந்த 3 ஆண்டுகளில் 45 முறை போதைப் பொருள்களை ஜாபர் சாதிக் கடத்தி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
போதைக் கடத்தலில் சம்பாதித்த பணத்தை திரைப்பட தயாரிப்புக்கு ஜாபர் சாதிக் பயன்படுத்தி இருப்பதாகவும் அந்தப் பணத்தை தி.மு.க., நிர்வாகிகளுக்கு வழங்கியுள்ளதாகவும் போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் இயக்கிய திரைப்படத்தையும் ஜாபர் சாதிக் தயாரித்திருக்கிறார். முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஆகியோரை சந்தித்து ஜாபர் சாதி நிதி அளித்திருக்கிறார்.
அந்தவகையில், போதைப் பொருள் மூலமாக சம்பாதித்த பணத்தை வரும் லோக்சபா தேர்தலில் தி.மு.க., பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்துக்குப் பொறுப்பேற்று ஸ்டாலினும் உதயநிதியும் பதவி விலக வேண்டும்.
தங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை என்றால் தி.மு.க.,வினர் ஏன் பயப்படுகிறார்கள். போதைக் கடத்தல் விவகாரத்தால் தி.மு.க.,வினர் நடுங்கிப் போய் உள்ளனர். நாங்கள் தவறே செய்யவில்லை என்றார், சட்டப்படி இந்த வழக்கை சந்திக்கலாமே?.
இவ்வாறு பழனிசாமி கூறினார்.
வாசகர் கருத்து