தேர்தல் ஆணையமா... தேர்தல் புறக்கணிப்பா : கார்கே கேள்வி
"லோக்சபா தேர்தல் வரவுள்ள நிலையில், இந்தியாவில் ஏன் ஒரே ஒரு தேர்தல் ஆணையர் மட்டும் இருக்கிறார்" என, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கேள்வியெழுப்பி உள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையர் அருண் கோயல், நேற்று பதவி விலகினார். இது குறித்து தனது 'எக்ஸ்' பக்கத்தில் கார்கே பதிவிட்டுள்ளதாவது:
தேர்தல் ஆணையமா... தேர்தல் புறக்கணிப்பா. இன்னும் சில தினங்களில் லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், இந்தியாவில் ஏன் ஒரே ஒரு தேர்தல் ஆணையர் மட்டும் இருக்கிறார்.
முன்பே கூறியது போல, சுதந்திர அமைப்புகளின் திட்டமிட்ட அழிவை நிறுத்தாவிட்டால் நமது ஜனநாயகம் சர்வாதிகாரத்தால் அபகரிக்கப்படும். வீழ்ச்சியடைந்த அரசியல் அமைப்புகளில் இந்திய தேர்தல் ஆணையம் கடைசியாக இருக்கும்.
தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்யும் புதிய நடைமுறை, தற்போது பிரதமருக்கு அனைத்து அதிகாரங்களையும் வழங்கி உள்ளது. அப்படியிருக்கும்போது, பிப்., 23ம் தேதி பதவிக் காலம் முடிந்த பின்னரும் புதிய தேர்தல் ஆணையரை ஏன் நியமிக்கவில்லை. இதற்கெல்லாம் மோடி அரசு சரியான விளக்கத்தை கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
வாசகர் கருத்து