சிக்குமா கமல்நாத்தின் சிந்த்வாரா தொகுதி?
ஒருங்கிணைந்த மத்திய பிரதேசம் இருந்தபோது, காங்கிரஸ் அங்கு கோலோச்சியது. சத்தீஸ்கர் பிரிக்கப்பட்டபோது, காங்கிரசின் பலமும் பிரிந்து சென்றுவிட்டது.
கடந்த 2003 சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வின் உமா பாரதியிடம், திக்விஜய் சிங் தலைமையிலான காங்கிரஸ் விழுந்த பின், இன்று வரை எழுந்திருக்க முடியவில்லை.
கடந்த லோக்சபா தேர்தலில், கமல்நாத்தின் சிந்த்வாரா தொகுதியில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற முடிந்தது. மிகவும் வலுவானவராகக் கருதப்படும் ஜோதிராதித்ய சிந்தியா, 2019 தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு, குனா தொகுதியில் தோல்வியடைந்தார்.
ஆதிக்கம் குறைப்பு
கடந்த 20 ஆண்டுகளில், குஜராத்தைவிட ம.பி., பா.ஜ.,வின் நம்பிக்கைக்குரிய கோட்டையாக மாறியுள்ளது. அதன் தொடர்ச்சியாக, காங்.,கில் இருந்த ஜோதிராதித்ய சிந்தியா, பா.ஜ.,வுக்கு வந்தார். தற்போது அவர் குனா தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார். குவாலியர் -- சம்பல் பிராந்தியத்தில், சிந்தியா அரசக் குடும்பத்துக்கு இருந்த ஆதிக்கமும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
சிந்தியா குடும்பத்தைச் சேர்ந்த ராஜமாதா வசுந்தரா ராஜே, மாதவராவ் சிந்தியா, யசோதரா ஆகியோர், காங்., மற்றும் பா.ஜ.,வில் முக்கிய பதவிகளில் இருந்து ஆட்சி புரிந்து வந்தனர்.
தற்போது ராஜமாதா, அவர் மருமகன் ஜோதிராதித்ய சிந்தியா இருவரும் பா.ஜ.,வில் உள்ளனர். அவர்களின் அதிகார எல்லைகளும் சுருக்கப்பட்டு விட்டன.
மத்திய பிரதேசத்தின் நீண்ட கால முதல்வரான சிவ்ராஜ் சிங் சவுகான், விதீஷா தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார். குஜராத்தின் காந்தி நகரைப் போல, இதுவும் பா.ஜ.,வை எப்போதும் ஏமாற்றாத தொகுதி. இந்த இரண்டு தொகுதிகளும், 50 ஆண்டுகளாக பா.ஜ.,விடமே உள்ளன.
கடந்த தேர்தலில் மொத்தமுள்ள 29ல், 28ல் பா.ஜ., வென்றபோதும், கமல்நாத்தின் சிந்த்வாரா தொகுதியில் மட்டும் பா.ஜ.,வின் பாச்சா பலிக்கவில்லை. இதிலும், பா.ஜ., சித்து விளையாட்டில் ஈடுபட்டது. கமல்நாத்தை கட்சிக்குள் இழுக்கும் முயற்சி நடந்தது. அவர் விதித்த நிபந்தனைகளின் பட்டியல் பெரிதாக இருந்ததால், பா.ஜ., அவரை வரவேற்கவில்லை.
அஸ்திவாரம் ஆட்டம்
இதற்கிடையே, சிந்த்வாரா தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள காங்கிரஸ் கவுன்சிலர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள், கமல்நாத் சென்றுவிடுவார் என்ற நம்பிக்கையில் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து, பா.ஜ.,வுக்கு சென்றுவிட்டனர்.
சிந்த்வாராவில் கமல்நாத்தின் அஸ்திவாரம் தற்போது ஆட்டம் கண்டுள்ளது. இதனால், அந்த தொகுதியும் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை பா.ஜ.,வுக்கு ஏற்பட்டுள்ளது.
வாசகர் கருத்து