நாகரிகமாக பேசினால் பதில் சொல்லலாம்: அண்ணாமலைக்கு கனிமொழி பதில்
"பெண்கள் சமையலறையில் இருக்க வேண்டும் என்ற நோக்கில் சிலிண்டர் விலையை குறைத்து இருக்கிறார்கள்" என, தி.மு.க., எம்.பி., கனிமொழி விமர்சித்துள்ளார்.
மகளிர் தினத்தையொட்டி, சமையல் காஸ் சிலிண்டருக்கான விலையில் ரூ.100ஐ குறைத்து பிரதமர் மோடி, அறிவிப்பை வெளியிட்டார். இதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இது குறித்து, தூத்துக்குடி விமான நிலையத்தில் தி.மு.க., எம்.பி., கனிமொழி கூறுகையில், வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலையை முன்பே குறைத்து இருக்கலாம். லோக்சபா தேர்தல் நேரத்தில் சிலிண்டர் விலையை குறைப்பது என்பது, பெண்களுக்கு அது மட்டும் தான் கவலை என்பது போல உள்ளது.
பெண்கள் சமையலறையில் இருக்க வேண்டும் என்ற நோக்கில் சிலிண்டர் விலையை குறைத்து இருக்கிறார்கள். அதற்கு மாற்றாக, பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வழிகளை மேற்கொள்ளலாம். தேர்தல் வருவதால் பிரதமர் மோடி அடிக்கடி தமிழகம் வருகிறார்" என்றார்.
கனிமொழி மீதான அண்ணாமலையின் விமர்சனம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, "நாகரிகமாக பேசக்கூடியவர்களுக்கு மட்டும் பதில் சொல்லலாம்" என்றார்.
முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, "கனிமொழி, அவருடைய அப்பாவின் வீட்டில் உள்ளார். சொந்தமாக சம்பாதித்தாரா? முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் என்பதை வைத்து கொண்டு, வாழ்ந்து கொண்டிருக்கிறார். பிரதமர் மோடியை பற்றி பேசுவதற்கு அவருக்கு எந்த தகுதியும் இல்லை.
கருணாநிதி என்ற பெயரை எடுத்துவிட்டால் கனிமொழி யார்? கனிமொழி கண்ணாடியில், தனது முகத்தை பார்த்துக் கொள்ள வேண்டும். எத்தனை வழக்குகள் அவர் மீது உள்ளன, எத்தனை முறை சிறை சென்றுள்ளார் என்பதை யோசிக்க வேண்டும்" என, விமர்சித்திருந்தார்.
வாசகர் கருத்து