15 மணிநேரத்தில் 22 லட்சம் பேர்: திணறிய த.வெ.க.,
தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கையை, அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் தொடங்கி வைத்த 15 மணிநேரத்தில் 22 லட்சம் பேர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய், கட்சி ஒன்றை தொடங்கியுள்ளார். தன்னுடைய அரசியல் திட்டங்கள் குறித்து அறிக்கை ஒன்றில் தெளிவாக விளக்கியிருந்தார். அதேபோல், கட்சியில் 2 கோடி உறுப்பினர்களை சேர்ப்பதை இலக்காக நிர்ணயித்தார். இதற்கென நிர்வாகிகளையும் நியமித்து நடிகர் விஜய் அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
நேற்று, உறுப்பினர் சேர்க்கைக்காக பிரத்யேக செயலி ஒன்றை அறிமுகப்படுத்தினார். இந்த செயலியை அறிமுகப்படுத்திய சில மணிநேரங்களிலேயே முடங்கியது. ஒரேநேரத்தில் அதிகப்படியான நபர்கள் உள்ளே நுழைந்ததால் செயலியின் செயல்பாட்டில் சிக்கல் ஏற்பட்டதாக த.வெ.க., தரப்பில் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் 15 மணிநேரத்தில் 22 லட்சம் பேர் வரையில் த.வெ.க.,வில் இணைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
த.வெ.க.,வில் உறுப்பினராக சேர விரும்பும் நபர்களிடம் கட்சியின் கொள்கை, கோட்பாடு, லட்சியம் ஆகியவற்றை கூறி உறுதிமொழி எடுக்க வைக்கவும் திட்டமிட்டுள்ளனர். அடுத்து, செயற்கை தொழில்நுட்பம் (ஏ.ஐ) மூலம் உறுப்பினர் சேர்க்கையை அறிமுகப்படுத்தும் முடிவில் த.வெ.க., இருக்கிறது.
உறுப்பினர் சேர்க்கைக்கான பணிகள் நிறைவடைந்த பிறகு அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளை நடிகர் விஜய் வெளியிட இருப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து