மகளிருக்கு ரூ.1 லட்சம் முதல் நீட் அவசியமில்லை வரை: காங்., தேர்தல் அறிக்கை
லோக்சபா தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. 'மகாலட்சுமி திட்டத்தின்கீழ் ஏழை மகளிருக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும்' என்பன முதல் பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், இன்று காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இதனை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்., எம்.பி., சோனியா காந்தி, ராகுல்காந்தி உள்ளிட்டோர் வெளியிட்டனர்.
தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நாடு முழுவதும் சமூக, பொருளாதாரரீதியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.
மகாலட்சுமி திட்டத்தின்கீழ் ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கப்படும்.
நீட், கியூட் தேர்வுகளை மாநில அரசுகள் தங்களின் விருப்பத்தின்படி நடத்திக் கொள்ளலாம்.
மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் மகளிருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு
பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான இடஒதுக்கீடு அனைத்து சாதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.
ஒரே நாடு ஒரே தேர்தல் முறை கொண்டு வரப்படாது.
மாநில அரசுகளிடம் கலந்து ஆலோசனை செய்த பிறகே தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும்.
மத்திய அரசில் காலியாக உள்ள 30 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.
சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரையின்படி, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கு உத்தரவாதம் அளிக்கப்படும்.
எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓ.பி.சி பிரிவினருக்கான இடஒதுக்கீடு உச்சவரம்பு 50 சதவீதம் என்பதை உயர்த்த சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும்.
ராஜஸ்தான் மாநிலத்தைப்போல, அனைத்து ஏழைகளுக்கும் ரொக்கமில்லா மருத்துவ காப்பீடு ரூ.25 லட்சமாக உயர்த்தப்படும்.
அரசியல் சாசனத்தின் எட்டாவது அட்டவணையில் ஏனைய மொழிகளையும் சேர்க்க நடவடிக்கை
தேர்தல் பத்திரம் குறித்து விசாரணை நடத்தப்படும்
விவசாயிகளின் வங்கிக் கடன் தள்ளுபடி செய்யப்படும்.
100 நாள் வேலைத்திட்ட ஊதியம் 400 ரூபாயாக உயர்த்தப்படும்.
பொதுத்துறை நிறுவனங்களில் ஒப்பந்த முறை ஒழிக்கப்பட்டு, அவை நிரந்தரமாக்கப்படும்.
புதுச்சேரி மற்றும் ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும்.
பா.ஜ., அரசு கொண்டு வந்த ஜிஎஸ்டி சட்டம் ரத்து செய்யப்பட்டு, புதிய ஜி.எஸ்.டி. 2.0 கொண்டு வரப்படும்.
ரயில்களில் மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகைகள் மீண்டும் வழங்கப்படும்.
தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்க புதிய சட்டம் கொண்டு வரப்படும்.
உணவு, உடை, காதல், திருமணம், பயணம் ஆகிய தனிமனித சுதந்திரத்தில் தலையிட மாட்டோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து