லோக்சபா தேர்தல்: வங்கிக் கணக்குகளை ஆராய தேர்தல் கமிஷன் அட்வைஸ்
லோக்சபா தேர்தலின் போது வங்கிக் கணக்குகளை கண்காணிக்க உரிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.
லோக்சபா தேர்தலில் பணியாற்றும் கோவை மற்றும் பொள்ளாச்சியை சேர்ந்த தேர்தல் அதிகாரிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு ஆலோசனை நடத்தினார். இதன்பின், செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
லோக்சபா தேர்தலில் 100 சதவீத ஓட்டுப் பதிவை உறுதி செய்வதற்கு தேர்தல் அலுவலர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. வாக்குப் பதிவு இயந்திரங்கள் முழுமையாக சரிபார்க்கப்பட்டுள்ளன. தேர்தலின் போது எந்த பிரச்னையும் ஏற்பாடாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
கோவை லோக்சபா தொகுதியில் மட்டும் பாதுகாப்புக்காக மூன்று துணை ராணுவ படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் வகையில் வங்கிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. யாருடைய வங்கிக் கணக்குகளிலாவது அதிகப்படியான பணம் வரவு வைக்கப்பட்டாலோ அல்லது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டாலோ உடனே தேர்தல் அலுவலர்களுக்கு தெரிவிக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரசாரத்தின்போது வீடு வீடாக சென்று ஓட்டுக்கு பணம் கொடுத்தால் சிவிஜில் செயலி மூலம் புகார் கொடுக்கலாம். அதன் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பணம் கொடுத்தது உறுதி செய்யப்பட்டால், அரசியல் கட்சிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோர் சிரமம் இல்லாமல் வாக்களிக்க ஏதுவாக சக்சம் என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து