தனிச் சின்னம் தான்... தொகுதி முடிவாகவில்லை: வைகோ
தி.மு.க., கூட்டணியில் ம.தி.மு.க.,வுக்கு ஒரு லோக்சபா தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. 'ஒரு தொகுதியில் தனிச்சின்னத்தில் போட்டியிடுகிறோம். எந்த தொகுதி ஒதுக்கப்படும் எனத் தெரியவில்லை' என, வைகோ தெரிவித்தார்.
லோக்சபா தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் ம.தி.மு.க., அங்கம் வகிக்கிறது. கடந்த சில நாள்களாக தி.மு.க., ஒருங்கிணைப்புக் குழுவினருடன் ம.தி.மு.க., நிர்வாகிகள் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சு நடத்தி வந்தனர். இதில், 2 லோக்சபா தொகுதிகளுடன் ஒரு ராஜ்யசபா சீட்டை ஒதுக்க வேண்டும் என, ம.தி.மு.க., தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால், ஒரு லோக்சபா தொகுதியை மட்டுமே ஒதுக்குவதற்கு தி.மு.க., முன்வந்தது. அதுவும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் எனக் கூறியதால் தி.மு.க., - ம.தி.மு.க., இடையே பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டது. ஒருகட்டத்தில், ஒரு லோக்சபா தொகுதியை ஒதுக்குவது எனவும் அதில், தனிச்சின்னத்தில் ம.தி.மு.க., போட்டியிட்டுக் கொள்ளலாம் என, தி.மு.க தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
'ராஜ்யசபா சீட்டை பொறுத்தவரையில், தற்போது வைகோ வகித்து வரும் ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்காலம் முடிய, ஒன்றரை ஆண்டுகள் உள்ளன. அப்போது முடிவு செய்து கொள்ளலாம்' என, தி.மு.க., தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து, நேற்று ம.தி.மு.க.,வின் நிர்வாக குழு கூட்டத்தில் ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, தீவிர ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், 'மதவாதத்தை எதிர்க்க வேண்டிய சிக்கலான காலகட்டத்தில் இருக்கிறோம். தனிச்சின்னத்தில் ஒரு தொகுதியில் போட்டியிட இருக்கிறோம். பம்பரம் சின்னம் கிடைக்காவிட்டால் ஏழு சுயேச்சை சின்னங்களை கொடுத்து, ஒரு சின்னத்தைப் பெறுவோம்' எனத் தெரிவித்தார்.
இதையடுத்து, இன்று தி.மு.க.,-ம.தி.மு.க., இடையே தொகுதிப் பங்கீடு கையெழுத்தாகியுள்ளது. இதுகுறித்து பேசிய வைகோ, "எந்த தொகுதி எனத் தெரியவில்லை. கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு தொகுதி நிலவரம் தெரிவிக்கப்படும். ராஜ்யசபா தேர்தலுக்கு 15 மாதங்கள் இருப்பதால் அந்த இடத்தை ஒதுக்குவது குறித்து அப்போது முடிவு செய்யப்படும்" என, தெரிவித்தார்.
'தற்போது ம.தி.மு.க.வின் சிட்டிங் தொகுதியாக ஈரோடு இருக்கிறது. இந்தமுறை திருச்சி தொகுதியை தி.மு.க., ஒதுக்கலாம். காங்கிரசுடன் தொகுதிப் பங்கீடு முடிந்த பிறகு ம.தி.மு.க.,வுக்கான தொகுதி எது என தெரியவரும்' என, ம.தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்தன.
வாசகர் கருத்து