அ.தி.மு.க., கூட்டணி: பா.பி., கதிரவனுக்கு என்ன சிக்கல்?
கடந்த சட்டசபை தேர்தலில், பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில பொதுச் செயலரான கதிரவன், உசிலம்பட்டி தொகுதியில், தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்டு அ.தி.மு.க.,வின் அய்யப்பனிடம் தோற்றார்.
அப்போது, தி.மு.க.,வினர் தங்களை மதிக்கவில்லை என்ற காரணத்தை தெரிவித்தார். தற்போது லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கு திடீரென ஆதரவு தெரிவித்தார் கதிரவன்.
இதையடுத்து, அவரை அக்கட்சியில் இருந்து நீக்கி, மேலிட பார்வையாளர் ஜெயராமன் அறிவித்ததாக நேற்று தகவல் பரவியது. இதற்கு காரணம் தலைமை செயற்குழு உறுப்பினர்கள், 14 பேர் உள்ள நிலையில், அவர்களில் நான்கு பேர் தன்னிச்சையாக, அ.தி.மு.க., வுக்கு ஆதரவு தெரிவிக்க பழனிசாமியை சந்தித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையொட்டி நாளை திருப்பூரில் நடக்க உள்ள கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு, அவரை கட்சியிலிருந்து நீக்கும் முடிவை வெளியிடப் போவதாக, புதிய பொதுச் செயலராக பதவி ஏற்க உள்ள கர்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முன்னாள் எம்.எல்.ஏ., கதிரவனிடம் கேட்டபோது, ''தேசிய தலைவர், செயலர் ஆகியோர் கூட்டணி கட்சிகளை முடிவு செய்யும் அதிகாரத்தை முழுமையாக எனக்கு வழங்கியுள்ளனர்.
''தேர்தல் நேரத்தில், இதுபோல குழப்பங்களை சிலர் ஏற்படுத்துவர். தி.மு.க., கூட்டணியை விரும்புவோர், இதுபோல பிரச்னைகளை கிளப்பி விடுகின்றனர். தலைமை என்னிடம் கொடுத்த பொறுப்பை நான் செய்து வருகிறேன்,'' என்றார்.
வாசகர் கருத்து