தி.மு.க., கூட்டணியில் ம.தி.மு.க.,வுக்கு 1 + 1 : திருச்சியில் போட்டி?
தி.மு.க., கூட்டணியில் ஓர் இடத்தில் ம.தி.மு.க., போட்டியிட உள்ளது. 'வைகோவின் ராஜ்யசபா பதவிக்காலம் முடிய ஒன்றரை ஆண்டுகள் உள்ளதால், அதன்பிறகு அந்த இடம் மீண்டும் ம.தி.மு.க.,வுக்கு வழங்கப்படலாம்' என ம.தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்தன.
தி.மு.க.,வின் தொகுதிப் பங்கீட்டு குழுவினருடன் கடந்த சில வாரங்களாக ம.தி.மு.க.,நிர்வாகிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. 2 லோக்சபா தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா உறுப்பினர் பதவியை ம.தி.மு.க., கோரியது. ஏற்கெனவே, ஒரு ராஜ்யசபா சீட் கொடுக்கப்பட்டுவிட்டதால், ஒரு தொகுதியை மட்டும் ஒதுக்குவதாகவும் அதில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என தி.மு.க., நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இதனை ம.தி.மு.க.,வின் பேச்சுவார்த்தைக் குழு ஏற்கவில்லை. 2 தொகுதிகள் வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். இந்நிலையில், ம.தி.மு.க.,வின் நிர்வாக குழு கூட்டம் இன்று நடந்தது.
இது குறித்து ம.தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:
நிர்வாக குழு கூட்டத்தில் வைகோ பேசும்போது, 'மிகவும் சிக்கலான காலகட்டத்தில் இருக்கிறோம். மீண்டும் மதவாதம் தலைதூக்கிவிடக் கூடாது என்பதற்காக தி.மு.க., கூட்டணியில் நீடிக்கிறோம். ஒரு தொகுதியில் தனிச்சின்னத்தில் போட்டியிட உள்ளோம். பம்பரம் சின்னம் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கின் முடிவில் பம்பரம் சின்னம் கிடைக்காவிட்டால், ஏழு சுயேச்சை சின்னங்களை கொடுத்து, அதில் ஒன்றில் நாம் போட்டியிட உள்ளோம்' எனக் குறிப்பிட்டார்.
தி.மு.க., கூட்டணியில் ஓர் இடத்தைப் பெறுவதில் ம.தி.மு.க., நிர்வாகிகளுக்கு உடன்பாடில்லை. ஆனால், கூட்டணி தர்மத்துக்காக ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது சிட்டிங் தொகுதியாக இருக்கும் ஈரோட்டில் மீண்டும் ம.தி.மு.க., போட்டியிட வாய்ப்பில்லை. திருச்சி தொகுதி கிடைக்கலாம் என எதிர்பார்க்கிறோம். வைகோவின் ராஜ்யசபா பதவிக்காலம் முடிய ஒன்றரை ஆண்டுகள் இருப்பதால், அதன் பிறகு மீண்டும் ராஜ்யசபா சீட்டை ஒதுக்க உள்ளதாக தி.மு.க., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
வாசகர் கருத்து