லோக்சபா தேர்தல்: பா.ஜ., கூட்டணியில் இணையும் பிஜு ஜனதா தளம்?
ஒடிஷாவில் பிஜு ஜனதா தளம் கட்சியுடன் பா.ஜ., மீண்டும் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு இக்கூட்டணி மலர உள்ளதாகவும் கூறப்படுகிறது.
பா.ஜ., உடன் 15 ஆண்டுகளுக்கு முன், பிஜு ஜனதா தளம் கூட்டணியில் இருந்தது. 2009ம் ஆண்டில் தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக, பா.ஜ., கூட்டணியில் இருந்து பிஜு ஜனதா தளம் விலகும் முடிவை எடுத்தது.
கூட்டணியில் இருந்து விலகினாலும் ஜனாதிபதி தேர்தல், துணை ஜனாதிபதி தேர்தல்களில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பிஜு ஜனதா தளம் ஆதரவு அளித்தது. ஒடிஷா மாநிலத்தில் 2019ல் நடந்த தேர்தலில் 12 லோக்சபா தொகுதிகளை பிஜு ஜனதா தளம் கைப்பற்றியது. அங்கு பா.ஜ.,வுக்கு 8 எம்.பி..,க்கள் உள்ளனர்.
தற்போது லோக்சபா தேர்தலுக்கான பணிகளில் தீவிரம் காட்டி வரும் பா.ஜ., தலைமை, ஒடிஷாவில் மீண்டும் பிஜு ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ளும் முடிவில் உள்ளது. இரு தரப்பிலும் உயர்மட்ட அளவில் நடந்த பேச்சுவார்த்தையில், பா.ஜ.,வுக்கு எட்டு தொகுதிகளை ஒதுக்க பிஜு ஜனதா தளம் முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஒடிஷாவில் பிஜு ஜனதா தளமும் பா.ஜ.,வும் தொடர்ந்து பரஸ்பர நட்புணர்வு பாராட்டி வருவதால் விரைவில் கூட்டணி முடிவுகள் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
வாசகர் கருத்து