தி.மு.க., மரியாதை தரவில்லை: அ.தி.மு.க., கூட்டணியில் இணைந்த பார்வர்டு பிளாக்
தி.மு.க., கூட்டணியில் மரியாதை இல்லாததால் அ.தி.மு.க., கூட்டணியில் இணைந்ததாக பார்வர்டு பிளாக் கட்சியின் பொதுச் செயலர் தெரிவித்தார்.
லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியை வலுப்படுத்தும் வேலைகளில் அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி ஈடுபட்டு வருகிறார். புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ, புதிய பாரதம் ஆகிய கட்சிகள், அ.தி.மு.க., கூட்டணியில் இணைந்துள்ளன. இதை தொடர்ந்து, வரும் லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளதாக அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி, அறிவித்துள்ளது.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து பார்வர்டு பிளாக் கட்சி போட்டியிட்டது. உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிட்ட பார்வர்டு பிளாக் கட்சியின் பொதுச் செயலர் கதிரவன், அ.தி.மு.க., வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார்.
இந்நிலையில், இன்று காலை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் அ.தி.மு.க., பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமியை, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் பொதுச் செயலர் கதிரவன் சந்தித்துப் பேசினார்.
பின், செய்தியாளர்களிடம் பேசிய கதிரவன், "தி.மு.க., கூட்டணியில் மரியாதை இல்லை. அதனால் வெளியேறிவிட்டோம் என அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி தெரிவித்துள்ளது. தேனி அல்லது தென்மாவட்டங்களில் போட்டியிடுவது தொடர்பான கோரிக்கையை பழனிசாமியிடம் தெரிவித்திருக்கிறோம்" என்றார்.
வாசகர் கருத்து