பிரதமர், இப்படியா பொய் பேசுவது : முதல்வர் ஸ்டாலின் கேள்வி
இரண்டு மாபெரும் இயற்கை பேரிடரை எட்டு மாவட்டத்து மக்கள் சந்தித்தார்கள். இதற்காக 37 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை கேட்டோம். அதற்கு 1 ரூபாயை கூட மத்திய அரசு ஒதுக்கவில்லை' என, முதல்வர் ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தி.மு.க., ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு எத்தனையோ முத்திரை திட்டங்களை தொடங்கியிருக்கிறோம். அப்படியொரு திட்டம்தான், நீங்கள் நலமா என்ற புதிய திட்டம். உங்கள் நலனைக் காக்கவே உழைக்கிறேன்.. அதன் அடையாளம்தான் 'நீங்கள் நலமா' திட்டம்.
எங்களை குடும்ப ஆட்சி என்று சொல்கின்றனர். ஆமாம். இது குடும்ப ஆட்சி தான். தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பத்தையும் கை தூக்கிவிடும் ஆட்சியாக இருக்கிறது. ஆட்சிக்கு வந்த ஓராண்டு காலத்தில் ஏராளமான மனுக்கள் என்னைத் தேடித் தேடி வழங்கப்பட்டது. அப்படி வழங்கப்பட்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்றிக் கொடுத்த காரணத்தால், மக்களின் கைகளில் மனுக்களைக் காண முடியவில்லை.
கோட்டையில் உட்கார்ந்து திட்டங்கள் தீட்டி அறிவிப்பதோடு எனது கடமை முடிந்து விட்டதாக எப்போதும் நினைப்பது இல்லை. ஒவ்வொரு திட்டமும் எந்த நோக்கத்துக்காக அறிவிக்கப்பட்டதோ, அந்த நோக்கம் நிறைவேற்றப்பட்டு வருகிறதா என்பதுதான் எனக்கு முக்கியம். நலத்திட்டம் ஒரு ரூபாய் என்றாலும் அது உங்களிடம் வந்து சேர வேண்டும் என்று நினைத்து திட்டங்களைத் தீட்டுகிறேன்.
அதேசமயம், மத்திய அரசின் ஓரவஞ்சனையால் தமிழ்நாட்டுக்குத் வர வேண்டிய நிதி உதவிகள் படிப்படியாகக் குறைக்கப்பட்டு வருவதை நான் அதிகம் விளக்கத் தேவையில்லை. சில நாட்களுக்கு முன்னால் சென்னைக்கு வந்து பேசிய பிரதமர் மோடி, மாநில அரசுக்குத் தராமல் மக்களுக்கு நேரடியாக நிதி வழங்கி வருவதாக அப்பட்டமான ஒரு பொய்யைச் சொல்லி விட்டுச் சென்றுள்ளார். எந்த மக்களுக்குக் கொடுத்தார் என்பதைச் சொல்லி இருந்தால் அந்த மக்களுக்குக் கிடைத்ததா என்று கேட்கலாம்.
2 மாபெரும் இயற்கை பேரிடரை எட்டு மாவட்ட மக்கள் சந்தித்தார்கள். இதற்காக 37 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை கேட்டோம். அதற்கு 1 ரூபாயை ஆவது ஒதுக்கி, தமிழக மக்களுக்கு உதவி செய்தாரா பிரதமர்.. இப்படியா பொய்களைச் சொல்வது?
மத்திய அரசிடம் இருந்து நிதி வரவில்லை என்றாலும் இந்த எட்டு மாவட்டத்துக்கு மக்களுக்காக, மாநிலப் பேரிடர் நிதி மற்றும் அரசுத் துறைகளில் இருந்து 3406.77 கோடி ரூபாய் அளவுக்கு நிதி வழங்கியும், நிவாரணப் பணிகளைச் செய்தும் மக்களை காத்தோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
வாசகர் கருத்து