புகார் வந்தால் 100 நிமிடங்களில் நடவடிக்கை: தேர்தல் கமிஷனர்
"தேர்தல் குறித்த புகார்களை 'சிவிஜில்' செயலி வாயிலாக தெரிவிக்கலாம்" என தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் தெரிவித்துள்ளார்.
மேற்குவங்க மாநிலத்தில், லோக்சபா தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் இன்று ஆலோசனை நடத்தினார்.
பின், நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
தேர்தல் கமிஷன் சார்பில் 'சிவிஜில்' எனும் செயலி செயல்படுத்தப்பட உள்ளது. தேர்தல் குறித்த பிரச்னைகள், வன்முறை சம்பவங்கள் போன்ற ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால், பொதுமக்கள் இந்த செயலி வாயிலாக புகார் அளிக்கலாம்.
செயலியில், புகார் அளிக்கப்பட்ட 100 நிமிடங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு தவறான குற்றப் பின்னணி இருப்பது தெரியவந்தால், இந்த செயலி வாயிலாக எளிதாக கண்டறிய முடியும்.
வேட்பாளர்களின் குற்றப் பின்னணி குறித்து தெரியவந்தால் சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள் மூன்று பத்திரிகைகளில் விளம்பரங்களை வெளியிட்டு, தங்கள் மீதுள்ள குற்றப் பின்னணி குறித்து தெரிவிக்க வேண்டும். அரசியல் கட்சிகளும், தங்கள் இணையதளத்திலும் பத்திரிகை விளம்பரங்களிலும் வேட்பாளர்கள் குறித்த விவரங்களை வெளியிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்
வாசகர் கருத்து