இனி எப்போதும் என்.டி.ஏ., கூட்டணி தான் : மோடிக்கு உறுதி கொடுத்த நிதிஷ்
" இனி எப்போதும் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருப்பேன் என பிரதமர் மோடிக்கு உறுதியளிக்கிறேன்" என, பீஹாரில் நடந்த கூட்டத்தில் முதல்வர் நிதிஷ்குமார் பேசினார்.
பீஹார் மாநிலம் அவுரங்காபாத்தில் 21,400 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று (மார்ச் 2) அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் நிதிஷ்குமார் பேசியதாவது:
லோக்சபா தேர்தலில் 400க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வெல்லும். இனி எப்போதும் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருப்பேன். இங்கேயும் அங்கேயும் போக மாட்டேன் என பிரதமர் மோடிக்கு உறுதியளிக்கிறேன். இதற்கு முன்பு பிரதமர் இங்கு வந்தார். அப்போது நான் அவருடன் இல்லை. இப்போது அவருடன் இருக்கிறேன்.
பீஹார் மாநிலத்துக்கு பிரதமர் மோடியை வரவேற்கிறேன். மாநிலத்தின் வளர்ச்சியில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. வரும் காலங்களில் வளர்ச்சியில் புதிய உயரத்தை பீஹார் எட்டும். பீஹார் மக்கள், பொருளாதாரரீதியாக அதிக அதிகாரங்களை பெற்றவர்களாக உணர்வார்கள்.
இவ்வாறு நிதிஷ்குமார் பேசினார்.
விழாவில், பிரதமருக்கு மாலை அணிவிக்க நிதிஷ்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள் முயன்றபோது, அவர்களை தன்பக்கம் அழைத்து மாலையை பகிர்ந்து கொண்டார், பிரதமர் மோடி. இதற்கு கைகூப்பி நன்றி தெரிவித்தார், நிதிஷ்குமார்.
வாசகர் கருத்து