உத்தரவுகளை மதிக்காத தி.மு.க.,: தேர்தல் அதிகாரியிடம் அ.தி.மு.க., புகார்
'வருவாய் மற்றும் காவல் துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்வது தொடர்பாக, தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகளை தி.மு.க., மதிக்கவில்லை' எனக் கூறி தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க., புகார் அளித்துள்ளது.
அ.தி.மு.க., செய்தித் தொடர்பாளரும் அக்கட்சியின் வழக்கறிஞர் பிரிவின் இணைச் செயலருமான பாபு முருகவேல், தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
இந்திய தலைமை தேர்தல் ஆணையம், மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியில் உள்ள ஆட்சிப் பணி அதிகாரிகளையும், காவல் பணி அதிகாரிகளையும் அந்த மாவட்டத்திலிருந்து வேறு மாவட்டங்களுக்கு பணி மாறுதல் செய்ய வேண்டும் என்ற சுற்றறிக்கையை அனுப்பி இருந்தது.
மேலும், ஒரே லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட அடுத்தடுத்த மாவட்டங்களுக்கு பணியிடம் மாற்றம் செய்யக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்து இருந்தது. ஆனால், இந்த உத்தரவை எல்லாம் காற்றில் பறக்கவிட்ட தி.மு.க., அரசு, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக இருந்த பாஸ்கர பாண்டியனை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்திருந்தது.
ஆனால், திருவண்ணாமலை லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட இரண்டு சட்டமன்ற தொகுதிகள் திருப்பத்தூர் மாவட்டத்திலும் வருவதால் அவர், திருவண்ணாமலை மாவட்டத்தில் பணிபுரிவது சட்டத்தின்படி நியாயமாக இருக்காது. அதேபோல், கோயம்புத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக உள்ள பத்ரி நாராயணனை நியமனம் செய்து இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், அவர் தொடர்ந்து செயல்பட்டு கொண்டிருக்கிறார்.
அவரையும் அந்த மாவட்டத்திலிருந்து வேறு மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்ய வேண்டும். இது போன்ற ஒரு நிலை ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்டபோது தலைமை தேர்தல் ஆணையம் உடனடியாக தலையிட்டு கடுமையான உத்தரவுகளை பிறப்பித்தது. அதேபோன்ற நிலை, தமிழகத்திலும் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உருவாக்கி விடக்கூடாது.
எனவே, இந்திய தலைமை தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை தி.மு.க., அரசு கடைபிடிப்பதை தலைமை தேர்தல் ஆணையர் என்ற முறையில் கண்காணிக்க வேண்டும். தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலே பணியில் உள்ள மாவட்ட கலெக்டர்களையும் காவல் கண்காணிப்பாளர்களையும் பணியிட மாற்றம் செய்ய வேண்டும்.
தேர்தலுக்கு வசதியாக தி.மு.க., அரசு அவர்களை பயன்படுத்திக் கொள்வதற்கு சாத்திய கூறுகள் இருக்கிறது. உடனடியாக, தலைமை தேர்தல் அதிகாரி இந்த விஷயத்தில் தலையிட்டு நல்ல முடிவை எடுக்க வேண்டும். மாவட்டங்களில் தொடர்ந்து பணியாற்றும் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய வேண்டும். தமிழகத்தில் லோக்சபா தேர்தல் நியாயமாக நடைபெறுவதற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து