வெங்கடேசனுக்கு மீண்டும் சீட்; எதிர்ப்பை மீறி தி.மு.க., முடிவு?
தி.மு.க., தலைவர்களின் எதிர்ப்பையும் மீறி, மதுரை லோக்சபா தொகுதியை எம்.பி., வெங்கடேசனுக்கே கொடுப்பதாக அக்கட்சித் தலைமை முடிவு செய்துள்ளது. இந்த அதிர்ச்சி வைத்தியத்தால் தி.மு.க., நிர்வாகிகளும், தொண்டர்களும் கலங்கிப் போயிருக்கின்றனர்.
'பேன்ட், சட்டை கசங்காமல் மேல்மட்ட பிரச்னைகளுக்காக மட்டும் 'எக்ஸ்' தளத்தில் மட்டும் எந்த நேரமும் அரசியல் செய்கிறார்; தி.மு.க., கூட்டணி குதிரையில் ஏறி வெற்றி பெற்று எம்.பி.,யாக வலம் வந்தாலும் மக்கள் பிரச்னைக்காக இவர் களத்திற்கு வந்தது அபூர்வம்; இவரால் 5 ஆண்டுகளில் ஒரு தி.மு.க.,காரனுக்கு கூட பிரயோஜனம் இல்லை' என மார்க்சிஸ்ட் கம்யூ., எம்.பி., வெங்கடேசனுக்கு எதிராக மதுரை லோக்கல் தி.மு.க., தலைவர்கள் சீறிவந்தனர்.
இன்னொரு பக்கம், வெங்கடேசன், தான் சார்ந்த மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி நபர்களுக்கே ஒன்றும் செய்யாததாலும், கட்சியின் அடிப்படைக் கொள்கையான எளிமைக்கு எதிராக ஆடம்பரமாக செயல்பட்டு வருவதாலும், கட்சித் தலைமையும் அவர் மீது அதிருப்தியில் இருப்பதாக அக்கட்சியினர் கூறுகின்றனர்.
இத்தனை எதிர்ப்புக்கு இடையிலும், அந்த தொகுதியை மீண்டும் கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூ.,க்கு ஒதுக்க தி.மு.க., முடிவு செய்து உள்ளது.
இதுகுறித்து மதுரை தி.மு.க.,வினர் கூறியதாவது:
கடந்த முறை தி.மு.க.,வால் வெற்றி பெற்ற வெங்கடேசன் அவருக்கு என, தனியாக 'மேல்மட்ட அரசியல் லாபி'யை ஏற்படுத்திக் கொண்டார்.
குறிப்பாக சில உயர் அதிகாரிகளின் நட்பால் முதல்வர் 'குட்புக்'கில் இன்றும் தொடர்கிறார். இதனால் லோக்கல் அமைச்சர்கள், நிர்வாகிகளை கூட அவர் பெரிதாக கண்டுகொள்வதில்லை என்ற விமர்சனம் அவர் மீது உள்ளது. இது தி.மு.க., தலைமையின்சீனியர் தலைவர்களுக்கும் தெரியும்.
ஆனால் கட்சியில் வேறு ஆள் இல்லை என்ற காரணத்தால் இப்போது வெங்கடேசனே போட்டியிடத் தயாராகி வருவதாக கேள்விப்படுகிறோம். அவர் மீண்டும் போட்டியிட்டால் அவருக்காக களத்தில் இறங்கி கட்சிப் பணியாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு நாங்கள் தள்ளப்பட்டு உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
எப்படிப் பார்த்தாலும் மதுரை தொகுதி தேர்தலில் அனைத்து பாரத்தையும் அமைச்சர் மூர்த்திதான் தாங்க வேண்டும் என்றும் புலம்பி வருகின்றனர்.
வாசகர் கருத்து