களமிறங்கும் கார்த்தி; வருத்தத்தில் தி.மு.க.,வினர்

தி.மு.க., மற்றும் காங்., நிர்வாகிகளின் எதிர்ப்பிற்கு இடையே சிவகங்கை தொகுதியில், ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிவகங்கை லோக்சபா தொகுதியில் ஏழு முறை ப.சிதம்பரம் வெற்றி பெற்று, மத்திய அமைச்சர், இணை அமைச்சர் பதவிகள் வகித்தார். அவரை தொடர்ந்து, 2014 தேர்தலில் அ.தி.மு.க., வேட்பாளர் செந்தில்நாதனை எதிர்த்து, காங்., சார்பில் களம் கண்ட கார்த்தி தோல்வியை தழுவினார். அப்போது காங்., நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டது. 2019 லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், காங்., சார்பில் போட்டியிட்டு வென்ற கார்த்தி, எம்.பி.யானார்.
இந்நிலையில், மூன்றாவது முறையாக அவருக்கு வாய்ப்பளிக்கக்கூடாது என, காங்., முன்னாள் மத்திய இணையமைச்சர் சுதர்சன நாச்சியப்பன், எம்.எல்.ஏ.,க்கள், முன்னாள் மாவட்ட நிர்வாகிகள் சிலர் கருத்து தெரிவித்தனர்.
சொந்தக் கட்சியினரின் எதிர்ப்பு ஒரு பக்கம் இருக்க. தி.மு.க.,விலும் எதிர்ப்பு கிளம்பியது. கடந்த மாதம் சென்னையில் அமைச்சர் உதயநிதி தலைமையில் நடந்த அக்கட்சி நிர்வாகிகள் கூட்டத்திலும், கார்த்திக்கு எதிராக குரல் கொடுத்தனர். அதையெல்லாம் தாண்டி, சிவகங்கை தொகுதியை மீண்டும் காங்கிரசுக்கே வழங்க தி.மு.க, தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அதை முன்னிட்டு, முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம், தொகுதி முழுதும் பூத் கமிட்டி கூட்டங்களை நடத்தி, தொண்டர்களை தயார்படுத்தி வருகிறார். அதனால், காங்., கட்சியினர் உற்சாகத்தில் உள்ளனர்.
'நாங்கள் என்ன தான் கட்சி தலைமையிடம் வலியுறுத்தினாலும், முன்னாள் அமைச்சர் சிதம்பரம், மேலிட தலைவர்களிடம் பேசி தன் மகனுக்காக 'சீட்' வாங்கிக் கொள்வார்' என, தி.மு.க.,வினர் வருத்தத்தில் ஆழ்ந்துள்ளனர்.
வாசகர் கருத்து