தி.மு.க.,வுடன் பேச்சு நடத்த வி.சி.க., வரவில்லை; 2 தொகுதி மட்டும் போதாதாம்

கடந்த லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளில், வி.சி., போட்டியிட்டு வெற்றி பெற்றது. சிதம்பரம் எம்.பி.,யாக திருமாவளவன், விழுப்புரம் எம்.பி.,யாக ரவிக்குமார் உள்ளனர்.
இந்த முறை, இரண்டு தனி தொகுதிகள், ஒரு பொது தொகுதி என, மொத்தம் மூன்று தொகுதிகளை, அக்கட்சி கேட்டு வருகிறது.
ஏற்கனவே ஒரு சுற்றுப் பேச்சு முடிந்துள்ள நிலையில், இரண்டாவது கட்ட பேச்சு நடத்த வருமாறு நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு, தி.மு.க., தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், வி.சி., கட்சியினர் அறிவாலயம் செல்லவில்லை.
அதேநேரத்தில், சென்னை அசோக் நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில், உயர்நிலை குழு கூட்டத்தை கூட்டி, திருமாவளவன் ஆலோசனை நடத்தினார்.
இதனால், தி.மு.க., தொகுதி பங்கீடு குழுவினர் அதிருப்தி அடைந்தனர்.
திருமாவளவன் அளித்த பேட்டி:
தி.மு.க., குழுவினருடன் பேசுவதற்கு இசைவு தெரிவித்தேன். ஆனால், உயர்நிலை குழு கூட்டம் முடிய தாமதமானது. எனவே, மூத்த அமைச்சரை தொடர்பு கொண்டு, மீண்டும் உரிய நேரத்தை ஒதுக்கீடு செய்து பேச்சு நடத்த வருகிறோம் என்றேன்.
முதலில், நான்கு தொகுதிகள் வேண்டும் என்றோம். தற்போது, இரு தனி தொகுதிகளும், ஒரு பொது தொகுதியும் கண்டிப்பாக தேவை என்று கேட்டுள்ளோம். கேளுங்கள் கொடுக்கப்படும் என்பதால், அதிக இடங்களை கேட்பதற்கான உரிமையும், தேவையும் எங்களுக்கு இருக்கிறது. அதனால் கேட்கிறோம்.நாங்கள் திரும்ப திரும்ப மூன்று தொகுதிகளை கேட்டுக் கொண்டிருப்போம். கூட்டணி கட்சிகளுக்கு இடையே பிளவு இல்லை. யாரும் இலவு காத்த கிளி போல காத்திருக்க வேண்டாம். தி.மு.க., கூட்டணியில் தான் போட்டியிடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இரு கட்சிகளுடன் பேச்சு
இதற்கிடையில், சென்னை அறிவாலயத்தில், தி.மு.க., தொகுதி பங்கீடு குழுவினருடன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று பேச்சு நடத்தினர்.
தங்களுக்கு ஒரு தொகுதி ஒதுக்க வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்தனர். முதல்வரிடம் கேட்டு சொல்வதாக, தி.மு.க., பொருளாளர் டி.ஆர்.பாலு பதில் கூறியுள்ளார்.
ஜவாஹிருல்லா கூறுகையில், ''எங்களுக்கு சீட் வேண்டும் என, அழுத்தமாக பதிவு செய்துள்ளோம். விரைவில் நல்ல முடிவை எதிர்பார்க்கிறோம்,'' என்றார்.
அதேபோல, தி.மு.க., குழுவிருடன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பேச்சு நடத்தினார். அவரும் தங்களுக்கு தொகுதி வேண்டும் என்றார். ஜவாஹிருல்லாவுக்கு அளித்த அதே பதிலை வேல்முருகனிடம் சொல்லி அனுப்பி வைத்தார் டி.ஆர்.பாலு.
வாசகர் கருத்து