அழைப்பு மணி ஒலிக்குமா? பன்னீர் - தினகரன் காத்திருப்பு!
கூட்டணி பேச்சுக்கு, பா.ஜ., எப்போது அழைக்கும் என்ற எதிர்பார்ப்பில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், அ.ம.மு.க., பொதுச் செயலர்தினகரன் ஆகியோர்காத்திருக்கின்றனர்.தினகரன் கட்சி, 2019 லோக்சபா தேர்தலில், எஸ்.டி.பி.ஐ., கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. தோல்வியை தழுவினாலும், சில தொகுதிகளில், அ.தி.மு.க.,வின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.
ராமநாதபுரம் தொகுதியில், 1.41 லட்சம்; தென்காசியில் 92,116; தேனியில் 1.44 லட்சம்; விருதுநகரில் 1.07 லட்சம்; சிவகங்கையில் 1.22 லட்சம் ஓட்டுகளை பெற்றது.
கடந்த, 2021 சட்டசபை தேர்தலில், தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது; இதிலும் தோல்வியை தழுவியது. அதேநேரம், அ.தி.மு.க., ஆட்சி இழக்கவும் காரணமாக அமைந்தது.
இந்த சூழ்நிலையில், வரும் லோக்சபா தேர்தலில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியுடன் இணைந்து தேர்தலை சந்திக்க, தினகரன் முடிவு செய்துள்ளார். இருவரும் இணைந்து பொதுக்கூட்டங்களில் பங்கேற்றனர்.
'அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு' என்ற அமைப்பை துவக்கி, அனைத்து மாவட்டங்களுக்கும், பன்னீர்செல்வம் நிர்வாகிகளை நியமித்துள்ளார். தினகரன், சசிகலா ஆகியோருடன் இணைந்து தேர்தலை சந்தித்தால், தென் மாவட்டங்களில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றும், அவர் நம்புகிறார்.
அதேநேரம், பா.ஜ., கூட்டணியிலிருந்து, அ.தி.மு.க., விலகியதால், பா.ஜ., தங்களை சேர்த்துக் கொள்ளும் என்பது, பன்னீர்செல்வத்தின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. எனவே, பா.ஜ., எதுவும் பேசுவதற்கு முன்பாகவே, 'நாங்கள் பா.ஜ., கூட்டணியில் உள்ளோம்' என, திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்.
ஆனால், பா.ஜ.,வோ இன்னும் பன்னீர்செல்வம் மற்றும் தினகரனை பேச்சுக்கு அழைக்கவில்லை. த.மா.கா., உள்ளிட்ட சிறிய கட்சிகளுடன் பேசும் பா.ஜ., தரப்பு, பன்னீர்செல்வம் மற்றும் தினகரனிடம் பேசவில்லை.
அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சில் ஈடுபட்டுள்ள நிலையில், பன்னீர்செல்வம் மற்றும் தினகரன், பா.ஜ., அழைப்புக்காக காத்திருக்கின்றனர்.
இதுகுறித்து, பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கூறியதாவது:
பா.ஜ., அழைக்கும் என்ற எதிர்பார்ப்பில், பன்னீர்செல்வம் உள்ளார். ஆனால், எந்த பதிலும் தெரிவிக்காமல் உள்ளனர். பன்னீர்செல்வத்தை நம்பி தினகரனும், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க முடியாமல் உள்ளார். கூட்டணி உண்டா, இல்லையா என்பதை பா.ஜ., தெரிவித்தால், அடுத்த நடவடிக்கை எடுக்க உதவியாக இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாசகர் கருத்து