ராமநாதபுரத்தில் மீண்டும் நவாஸ் கனி போட்டி
ராமநாதபுரத்தில் தி.மு.க., கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் மீண்டும் நவாஸ் கனி போட்டியிட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தி.மு.க., கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஐ.யூ.எம்.எல்.,க்கு இந்த முறையும் ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டது. இக்கட்சியின் சார்பாக கடந்த முறை போட்டியிட்டு வென்ற நவாஸ் கனிக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த முடிவை அக்கட்சியின் மாநில பொதுக்குழு எடுத்துள்ளது.
மீண்டும் ஐ.யூ.எம்.எல்., போட்டியிடுவது ராமநாதபுரத்தில் உள்ள தி.மு.க.,வினர் மத்தியில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, உதயநிதி தலைமையிலான ஒருங்கிணைப்பு குழுவினரிடம், தங்களின் ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தனர். அப்போது, 'தேர்தல் வரும்போதெல்லாம் கூட்டணிக் கட்சிக்கே எம்.பி., தொகுதியை தலைமை ஒதுக்குகிறது. இந்தமுறை தி.மு.க., போட்டியிட வேண்டும்' எனக் கோரிக்கை வைத்தனர்.
உதயநிதியும், 'தலைமை என்ன முடிவெடுக்கிறதோ, அதற்கு கட்டுப்பட்டு தேர்தல் வேலை பாருங்கள்' என அறிவுறுத்தினார். ஆனால், மீண்டும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கே சீட்டை ஒதுக்கியதில் தி.மு.க.,வினர் மத்தியில் அதிருப்தி தென்படுகிறது.
'இந்தமுறை நவாஸ் கனிக்கு தி.மு.க.,வினர் ஆர்வத்துடன் பிரசாரம் செய்வார்களா?' என்ற கேள்வியும் ராமநாதபுரத்தில் வலம் வருகிறது.
வாசகர் கருத்து