தொகுதி மாறும் ஜெகத் : கலக்கத்தில் கதிர் ஆனந்த்
தன் மீது அரக்கோணம் தொகுதி மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளதால், வேறு தொகுதிக்கு மாறத் திட்டமிட்டுள்ளார் ஜெகத்ரட்சகன்.
அரக்கோணம் லோக்சபா தொகுதியில், ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள அரக்கோணம், சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு, வேலுார் மாவட்டத்திலுள்ள காட்பாடி, திருவள்ளுர் மாவட்டத்திலுள்ள திருத்தணி ஆகிய, 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இத்தொகுதியில், 3வது முறை எம்.பி.,யாக உள்ளார் ஜெகத்ரட்சகன்.
'எனினும் சொல்லும்படி தொகுதிக்கு அவர் எதுவும் செய்யவில்லை. அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் கூட கலந்து கொள்வதில்லை. கட்சி நிர்வாகிகளின் இல்ல நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதில்லை. தேர்தலுக்கு தேர்தல் மட்டும் வந்து, பணத்தை வாரி இறைத்து, வெற்றி பெற்றுவிட்டு மீண்டும் தொகுதி பக்கம் வருவதில்லை' என, தி.மு.க.,வினரே கடும் அதிருப்தியில் உள்ளனர்.
பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை நடத்திய, 'என் மண், என் மக்கள்' யாத்திரையில், ஜெகத்ரட்சகன் தொகுதிக்கு எதுவும் செய்யாதது, தொகுதி பக்கமே எட்டி பார்க்காதது குறித்துக் கடுமையாக விமர்சித்தார். அவரது விமர்சனம் உண்மை தானே என தொகுதி மக்களும் தற்போது பேசத் தொடங்கி விட்டனர்.
அதேநேரம், கட்சி தலைமைக்கும், தேர்தலுக்கும் பணம் செலவு செய்யத் தயங்காதவர் ஜெகத்ரட்சகன். அதனால் அவருக்கு சீட் இல்லை என்று தி.மு.க., கைவிரிக்க வாய்ப்பில்லை.அதேநேரம் தொகுதியிலும் சொல்லும்படி எதுவும் செய்யாததால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். மக்களின் அதிருப்தியால், சொந்தக் கட்சியினரே உள்குத்து வேலையில் இறங்கலாம் என்ற அச்சமும் ஜெகத்ரட்சகன் தரப்பிற்கு உள்ளது.
மேலும், வேலுார் தொகுதியில், பா.ஜ., கூட்டணி சார்பில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சி தலைவர் சண்முகம், கடந்த முறை குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தவர். கடந்த இரு ஆண்டுகளாக வேலுாரிலேயே முகாமிட்டு பணி செய்து வருகிறார்.இதனால், சண்முகத்திற்கு சமமாக செலவு செய்பவராக உள்ள ஜெகத்ரட்சகனை, வேலுார் தொகுதியில் போட்டியிட கட்சி தலைமை கிரீன் சிக்னல் கொடுத்துள்ளது. அதனால் அவரது ஆதரவாளர்கள், அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்கு முன்பே, சுவர் விளம்பரம் எழுத துவங்கி விட்டனர்.
கலக்கத்தில் கதிர் ஆனந்த்
அமைச்சர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் தான், வேலுார் தொகுதி எம்.பி., இவர் கட்சிக்கோ, நிர்வாகிகளுக்கோ எவ்வித செலவும் செய்வதில்லை. தொகுதியில் சொல்லிக் கொள்ளும்படி மக்கள் பணி செய்யவில்லை என்ற புகார் கட்சியினரிடையே உள்ளது. மேலும் உட்கட்சி பூசலால், வேலுார் தி.மு.க., மாவட்ட செயலரும், அணைக்கட்டு எம்.எல்.ஏ.,வுமான நந்தகுமார், வேலுார் மாநகர செயலரும்,வேலுார் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான கார்த்தி, திருப்பத்துார் மாவட்ட செயலரும், ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.,வுமான தேவராஜ் ஆகியோர், எம்.பி., க்கு எதிர்த் தரப்பாக மாறி விட்டனர். கடந்த லோக்சபா தேர்தலின்போது உட்கட்சி எதிரிகளே, வருமானவரித் துறை, தேர்தல் பறக்கும் படையிடம் போட்டுக் கொடுத்து, பலகோடி ரூபாயை பறிக்க வைத்து, தேர்தலை தள்ளி வைத்ததுபோல் இப்போதும் செய்து விடுவார்கள் என்ற பீதி, தந்தை, மகனிடம் உள்ளது.இதனால் மீண்டும் தனக்கு சீட் கிடைக்குமோ, கிடைக்காதோ என்ற அச்சத்தில் உள்ள கதிர் ஆனந்துக்கு, ஜெகத்ரட்சகன் விவகாரம் புதிய தலைவலியாக கிளம்பியுள்ளது.
வாசகர் கருத்து