எம்.ஜி.ஆர்., - ஜெ., விசுவாசிகள் ஓட்டு யாருக்கு? தேர்தலில் அறுவடை செய்ய பா.ஜ., வியூகம்
தமிழகத்தில், காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்திய பின், தி.மு.க., - அ.தி.மு.க., கட்சிகளே மாறி மாறி ஆட்சி செய்கின்றன. தேசிய கட்சிகளான, காங்., - பா.ஜ., கட்சிகள், மாநில கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கின்றன.
வரும் லோக்சபா தேர்தலில், தி.மு.க., - காங்., கூட்டணி உறுதியாக உள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி இடையே கூட்டணி இருந்தது. தற்போது, பா.ஜ.,வுடன் கூட்டணி இல்லை, என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி திட்டவட்டமாக அறிவித்து விட்டார்.
ஆனால், அ.தி.மு.க.,வில், பா.ஜ., ஆதரவு மனநிலையே தொடர்கிறது. அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் முதல், பொதுச்செயலர் பழனிசாமி வரையிலும், அனைவரும் தி.மு.க.,வை மட்டுமே விமர்சித்து வருகின்றனர்.
எம்.ஜி.ஆர்.,க்கு புகழாரம்
சமீபத்தில், திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நடந்த, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலையின், 'என் மண்; என் மக்கள்' யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பிரமதர் நரேந்திரமோடி பங்கேற்று பேசினார்.
அப்போது, 'தமிழகத்தில் நல்லாட்சி நடத்திய எம்.ஜி.ஆர்., தரமான கல்வி, சுகாதாரம் கொடுத்திருக்கிறார். பெண்கள், இளைஞர்கள் அவரை மதிக்கின்றனர். அவர் குடும்ப ஆட்சி நடத்தவில்லை. திறமையின் அடிப்படையிலும், கருணையின் அடிப்படையிலும் ஆட்சி நடத்தினார். அதனால் தான், இன்றும் எம்.ஜி.ஆர்., கொண்டாடப்படுகிறார்.
எம்.ஜி.ஆர்.,க்கு பின், ஜெயலலிதா மட்டுமே நல்லாட்சி கொடுத்தார். அவரை நான் நன்கு அறிவேன். சமீபத்தில் அவருக்கு பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அவருக்கு, இந்த மண்ணில் இருந்து என் அஞ்சலியை செலுத்துகிறேன். எம்.ஜி.ஆர்., கொள்கைகளை பின்பற்றி, மக்கள் நலனுக்காகவே வாழ்ந்தார் ஜெயலலிதா,' என, பிரதமர் பேசினார்.
அ.தி.மு.க.,வில் அதிர்வலை
பிரதமரின் பேச்சு அ.தி.மு.க.,வில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலில் எப்போது, எது வேண்டுமானாலும் நடக்கும். அதனால், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி உருவாகும் என்ற மனநிலையில் அ.தி.மு.க.,வினர் உள்ளனர்.
அ.தி.மு.க., விசுவாசிகள் கூறியதாவது:
எம்.ஜி.ஆர்., மறைவுக்கு பின், அ.தி.மு.க.,வை ஜெயலலிதா வழிநடத்தினார். அவரது தலைமை ஏற்று கட்சியினரும் பணியாற்றினர். அவரது மறைவுக்கு பின், பெரும் வெற்றிடம் ஏற்பட்டது. அ.தி.மு.க.,வை பழனிசாமி கைப்பற்றினாலும், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வர், தினகரன் ஆகியோர் ஜெயலலிதா பெயரை பயன்படுத்தி பிரசாரம் செய்கின்றனர்.
ஆட்சியை பிடிக்க வேண்டும், அமைச்சராக வேண்டும் என்பதில் மட்டுமே தற்போதைய அ.தி.மு.க., நிர்வாகிகளின் கனவாக உள்ளது. இதனால், அ.தி.மு.க.,வின் உண்மையான விசுவாசிகள் விரக்தியடைந்துள்ளனர். கட்சியின் வளர்ச்சிக்கு, தேர்தல் வெற்றி மிக முக்கியம். அதனால், பா.ஜ.,வுடன் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும். மத்திய ஆட்சியில் பங்கேற்க வேண்டும்.
விசுவாசிகள் விருப்பம்
பிரதமர் மோடி தன்னிடம் பேச வேண்டும், பா.ஜ., மாநில தலைமையை தவிர்த்து, நேரடியாக தேசிய தலைமையுடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்பது அ.தி.மு.க., தலைமையின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இரு கட்சியினருமே இணைந்து செயல்பட வேண்டும் என்றே விரும்புகின்றனர். ஆனால், இரு தரப்புக்கும், 'ஈகோ' பெரும் பிரச்னையாக உள்ளது. இரு கட்சியும் இணைந்து தேர்தலை சந்திப்பதே சிறந்தது; ஓட்டுக்களும் சிதறாமல் கிடைக்கும். அதுவே, பிரதமரின் விருப்பமாகவும் உள்ளது. இதை உணர வேண்டும்.
இதையெல்லாம் 'பல்ஸ்' பார்த்தே, பல்லடத்தில் பிரதமர் பேசும் போது, எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா ஆட்சிக்கு புகழாரம் சூட்டினார். எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா விசுவாசிகளின் மனதிலும், மத்தியில் பா.ஜ., ஆட்சி அமைய வேண்டும் என்ற ஆசை உள்ளது. அதனால், கூட்டணி அமையாவிட்டால், அந்த ஓட்டுகளை பா.ஜ., அறுவடை செய்ய வியூகம் வகுத்துள்ளது.
இவ்வாறு, கூறினர்.
வாசகர் கருத்து