கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தி.மு.க., தாராளம் ஏன்?
தமிழக அரசுக்கு சொந்தமான மின் வாரியம், போக்கு வரத்து கழகம் உட்பட பல பொதுத்துறை நிறுவனங்களில், கம்யூனிஸ்ட் கட்சிகளின் தொழிற்சங்கங்கள் பலம் வாய்ந்தவை.'புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும்; ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு தர வேண்டும்' உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கம்யூனிஸ்ட் கட்சிகளின் சி.ஐ.டி.யூ., - ஏ.ஐ.டி.யு.சி., சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மின் வாரிய தொழிற் சங்கங்களும் போராட்டம் நடத்தின.இது, ஆளும் கட்சியான தி.மு.க.,வுக்கு நெருக்கடியை கொடுப்பதாக அமைந்துள்ளது. தி.மு.க.,வை சேர்ந்த அமைச்சர்களும், மாவட்ட செயலர்களும் தங்களின் வாரிசுகளுக்கு, லோக்சபா தேர்தலில், 'சீட்' வாங்க முயற்சித்து வருகின்றனர்.இதற்காக, 'கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஓட்டு சரிந்து விட்டது; அவற்றுக்கான தேர்தல் செலவு மற்றும் தேர்தல் பணிகளை, நாம் தான் பார்க்கிறோம்; இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தலா ஒரு தொகுதி ஒதுக்கினால் போதும்' என, கட்சி தலைமையிடம் வலியுறுத்தினர்.அதற்கு ஏற்ப, வரும் லோக்சபா தேர்தலில், இரு கட்சிக்கும் தலா ஒரு தொகுதியை ஒதுக்க, தி.மு.க., முடிவு செய்தது. அதேசமயம், அக்கட்சிகளுடன் அ.தி.மு.க.,வும் பேச்சு நடத்தியது.மேலும், பொதுத் துறை நிறுவனங்களில், அரசுக்கு எதிராக போராட்டங்களை கம்யூனிஸ்ட் கட்சிகளின் சங்கங்கள் முன்னெடுப்பதை, தி.மு.க., தலைமை விரும்பவில்லை. அதை சரிக்கட்டும் நோக்கில் தான், சொந்த கட்சி நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும், கடந்த தேர்தலை போலவே, இம்முறையும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தலா, இரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக, ஆளும் கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
வாசகர் கருத்து