Advertisement

பா.ஜ.,வுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது : மோடியை விமர்சித்த ஸ்டாலின்

தி.மு.க தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின், பிறந்தநாள் செய்தி மடல் ஒன்றை எழுதியுள்ளார். அந்த மடலில் கூறியிருப்பதாவது:

திராவிட மாடல் ஆட்சி, இந்தியா முழுவதும் கவனிக்கப்படுகிறது. இந்த சூழலில் மாபெரும் ஜனநாயக கடமை ஒன்று நமக்கு காத்திருக்கிறது. இந்தியாவின் பன்முகத்தன்மையையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்க நடைபெற இருக்கும் தேர்தல் மிக முக்கியமானது. 'இண்டியா' கூட்டணி வெற்றி பெற வேணடும். இந்தியாவை ஆளும் பா.ஜ.,வை ஆட்சியில் இருந்து இறக்கும் ஜனநாயக போர்க்களத்துக்கு நாம் தயாராக வேண்டும்

தற்போது தமிழகத்துக்கு அடிக்கடி வரத் தொடங்கியிருக்கிறார், பிரதமர் மோடி. அவர் முகத்தில் தோல்வி பயம் தெரிகிறது. அந்தக் கோபத்தை தான் அவரது முகம் காட்டுகிறது. தி.மு.க.,வை பற்றியும் தி.மு.க., அரசைப் பற்றியும் அவதூறுகளை அள்ளி வீசியிருக்கிறார், மோடி. அவர் கொண்டு வந்த திட்டங்களுக்கு தடை போடுகிறோமாம். எந்த திட்டங்களை கொண்டு வந்தார், எதற்கு நாம் தடையாக இருந்தோம் என்று பட்டியல் போட்டிருந்தால் அதற்கு பதில் சொல்ல வசதியாக இருக்கும்.

எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டித் திறப்பதற்கு தடையாக இருந்தோமா... மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு தடையாக இருந்தோமா... மத்திய அரசின் எந்த திட்டங்களுக்கு நிலம் ஒதுக்காமல் இருந்தால் என்பதை சொல்லப்பட்டும். பொத்தாம் பொதுவாக குற்றம் சாட்டுகிறார், பிரதமர்.

நீட் தேர்வை எதிர்க்கிறோம். ஏழை மக்களின் மருத்துவக் கல்வி கனவை சிதைகும் பலிபீடம் அது. அதை எதிர்க்கத் தான் செய்வோம். மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்தோம். குடியுரிமை திருத்தச் சட்டம், சிறுபான்மையினர் மற்றும் இலங்கை தமிழர்களுக்கு எதிரானது. எதை எதிர்க்கிறோமோ அதை வெளிப்படையாக சொல்லிவிட்டுத் தான் எதிர்க்கிறோம்.

ஆனால், ஒரு மாநில அரசுக்குத் தரவேண்டிய நிதியை தராமல் கடன் வாங்க நினைத்தால் அதையும் தடுத்து, வெள்ள நிவாரணத்துக்கு கூட பணம் தராமல் இரக்கமற்று ஓர் அரசாட்சியை நடத்தி வரும் மோடிக்கு, தி.மு.க.,வை குறை சொல்ல எந்தத் தகுதியும் இல்லை. தி.மு.க.,வை ஒழித்துவிடுவேன், இல்லாமல் ஆக்கிவிடுவேன் என்று தான் வகிக்கும் பதவியை தாழ்த்தும் வகையில் பிரதமர் பேசியிருக்கிறார்.

தி.மு.க.,வை அழிப்பேன் என்று கிளம்பியவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள் என்பது தான் தமிழ்நாட்டு அரசியல் வரலாறு. அவரது பாணியில் பா.ஜ.,வே இருக்காது என்று சொல்ல மாட்டேன். எங்களை கருணாநிதி அப்படி வளர்க்கவில்லை. ஜனநாயக களத்தில் நின்று ஒரு கட்சி எப்படி செயல்பட வேண்டுமோ அப்படி செயல்படும் உரிமை பா.ஜ.,வுக்கு உண்டு. கடந்த காலத்தில் நல்ல ஆளும்கட்சியாக இருக்க தெரியாத பா.ஜ., வரும்காலத்தில் நல்ல எதிர்க்கட்சியாகவாவது இருக்கட்டும் என வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்