Advertisement

'எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை மோடி புகழ்ந்தது ஏன்?' :காரணம் சொல்லும் திருமாவளவன்

'எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை நம்பித் தான் பா.ஜ., இருக்கிறது. இதற்கு அ.தி.மு.க., தொண்டர்கள் இடம் கொடுக்கக் கூடாது' என வி.சி., தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். துாத்துக்குடி விமான நிலையத்தில் வி.சி., தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது :

பிரதமர் மோடி, இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்து சென்றார். பல்லடத்தில் அவர் பேசும்போது கடந்த 10 ஆண்டுகளில் மக்களுக்கு செய்தது என்ன என்பது குறித்தோ 10 ஆண்டுகளில் நாடு என்ன முன்னேற்றம் அடைந்திருக்கிறது என்பது குறித்தோ அவர் தெரிவிக்கவில்லை.

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை விமர்சிப்பது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றவர்களை புகழ்ந்து பேசுவது என தனது உரையை அமைத்துக் கொண்டார். தமிழகத்தின் தங்கள் கொள்கைகளைப் பேசி கட்சியை வளர்ப்பதற்கு பிரதமர் மோடியும் அமித் ஷாவும் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

தமிழகத்தில் ஆட்சியில் இருக்கக்கூடிய தி.மு.க., மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை விமர்சிப்பது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றவர்களையும் புகழ்ந்து பேசுவது போன்ற உத்தியை கையில் எடுத்திருக்கிறார், மோடி. பிரதமர், தன்னை நம்பவில்லை. தன் செல்வாக்கை நம்பவில்லை. தன் மீது மக்கள் கொண்டிருக்கின்ற நன் மதிப்பை நம்பவில்லை..தமிழகத்தை பொறுத்தவரை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை நம்பித்தான் அரசியல் செய்ய முடியும் என்ற நிலைக்கு வந்துவிட்டார் என்பதையே இது காட்டுகிறது

எம்.ஜிஆர்., ஜெயலலிதாவை புகழ்ந்தால் அ.தி.மு.க.,வின் ஓட்டைப் பெற முடியும் என நினைக்கின்றனர். இதன் வாயிலாக அ.தி.மு.க.,வை பலவீனப்படுத்த வேண்டும்; அதன் வாக்கு சதவீதத்தை சரிய செய்ய வேண்டும் என பா.ஜ., நினைக்கிறது. அ.தி.மு.க., தொண்டர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தி.மு.க., மற்றும் கூட்டணிக் கட்சிகளையும் எதிர்க்கிறோம் என்ற பெயரில் பா.ஜ.,வுக்கு வாக்களிக்கக் கூடிய நிலை வந்தால் தமிழகத்திற்கு பெரிய தீங்கு விளையும்.

இவ்வாறு அவர் கூறினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்