தமிழகத்தை மோடியிடம் ஒப்படைக்க அண்ணாமலை அழைப்பு
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையின் 'என் மண், என் மக்கள்' நிகழ்ச்சி, வட சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று (பிப்.,15) நடந்தது.
தமிழக பா.ஜ., சார்பில் பெரம்பூர் அருகே அகரம் சந்திப்பில் நடந்த நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசியதாவது:
ஜூலை 28ல் ராமேஸ்வரத்தில் துவக்கிய, 'என் மண் என் மக்கள்' பயணத்தில், சில நாட்களுக்கு முன் 200வது தொகுதியாக சென்னை துறைமுகம் தொகுதிக்கு வந்து சேர்ந்தோம். இன்னும் சில நாட்களில் 234 தொகுதிகளை முடித்து, கடைசியாக பல்லடத்தில் யாத்திரை முடிவு அடைய உள்ளது.
மக்கள் நேர்மையான அரசியலை எதிர்பார்ப்பதை இந்த பயணத்தில் அறிந்தேன். சாமானிய மனிதனை மையப்படுத்திய ஆட்சியை எதிர்பார்க்கின்றனர். எந்தவித லஞ்சம் இல்லாமல், வரிப்பணத்தை அதை மக்கள் பயன்படும் வகையில் செலவிட வேண்டும் என நினைக்கின்றனர்.
கொளத்துார் போன்ற பகுதியில் சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் பெய்கிற மழையில் எட்டு நாள் தண்ணீருக்குள் இருக்க வேண்டியுள்ளது. புதிதாக போட்ட ரோடு ஒரு மழைக்குக் கூட தாங்கவில்லை. 10 ஆண்டுகளாக சம்பாதித்தது எல்லாம், ஒரே ஒரு கனமழையில் இழப்பதை சாமான்ய மனிதன், சென்னையில் பார்த்துக் கொண்டிருக்கிறான். குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதி கூட கிடைக்கவில்லை.
தென்சென்னை எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியனின் சகோதரர் தமிழகத்தின் நிதியமைச்சராக உள்ளார். அவரது தந்தையும் அமைச்சராக இருந்தவர். மத்திய சென்னையிலும் அரசியல் வாரிசாக தயாநிதி, எம்.பி.,யாக உள்ளார். வட சென்னையில், ஆற்காடு வீராசாமியின் மகன் கலாநிதி, எம்.பி.,யாக உள்ளார். இவர்கள் மூன்று பேருக்கும் சாமான்ய மனிதரின் வலி தெரியுமா? அரசியல் குடும்பத்தில் பிறந்து, குடும்ப கோட்டாவில் எம்.பி.,யானவர்களுக்கு சாமான்ய மக்கள் மீது எந்த அக்கறையும் இல்லை.
மத்திய அரசு கொட்டித் தருகிறது. ஆனால், மாநில அரசு அதை மக்களுக்கு கிள்ளித் தருகிறது. மழை பாதிப்பின் போது, 10 ஆயிரம் தர வேண்டும் என்றோம். ஆனால், 6,000 ரூபாய் தந்தனர். அதில் 75 சதவீதம் மத்திய அரசின் பணம்; 25 சதவீதம் மட்டுமே மாநில அரசின் பங்கு. எந்த ஒரு முன்னேற்பாடும் இல்லாமல் கிளாம்பாக்கத்திற்கு பேருந்து முனையத்தை மாற்றி, மக்களை அவதிக்கு உள்ளாக்கி உள்ளனர்.
சாமான்ய மனிதன் நினைத்தால் மட்டுமே அரசியல் சுத்தமாகும். அப்படிப்பட்டவர் தான் இந்தியாவின் பிரதமராக அமர்ந்துள்ளார். மோடி ஆட்சிக்கு வந்த போது, உலகின் 11வது பெரிய வளர்ந்த நாடாக இந்தியா இருந்தது. பத்து ஆண்டுகளில், உலகின் பெரிய பொருளாதார நாடாக, ஐந்தாவது இடத்திற்கு இந்தியா உயர்ந்துள்ளது. கடின உழைப்பால், நேர்மையான ஆட்சியால், மக்களின் வரிப்பணத்தை சரியான முறையில் மக்களுக்கான திட்டங்களாகக் கொண்டு வந்ததால், இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின், 32 மாதத்தில் 2.69 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளனர். இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலமாக தமிழகம் உள்ளது. முத்ரா திட்டத்தில் பல லட்சம் பேர் தமிழகத்தில் பயன் பெற்றுள்ளனர். இத்திட்டத்தில் தமிழகத்தில் இரண்டு லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு செயல்படுத்தும் இதுபோன்ற ஏராளமான திட்டங்களை தமிழகத்தில் சரியாக செயல்படுத்தவில்லை. பா.ஜ., எங்கெல்லாம் பலமாக ஆட்சி அமைத்துள்ளதோ, அந்த மாநிலங்களில் மத்திய அரசின் திட்டங்கள் சரியாக சென்று சேர்ந்துள்ளன. மோடி கையில் தமிழகத்தையும், சென்னையையும் ஒப்படைக்க வேண்டிய நேரமும், காலமும் வந்து விட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதைத் தொடர்ந்து, பா.ஜ., சென்னை மேற்கு மாவட்டம் சார்பில் போரூர், காரம்பாக்கம் ஜெயின் கோவில் திடலில் மகளிர் சங்கமம் நிகழ்ச்சி நடந்தது. அப்போது, மருத்துவர் லஷ்மி, திரைப்பட பின்னணி குரல் கலைஞர் ஹேமமாலினி, செவிலித்தாய் விஜயலஷ்மி ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுகளை அண்ணாமலை வழங்கினார்.
நட்பிண்ணை பாபுவுக்கு புதுமை விவசாயி-, சமுக சேவகி -சிவசங்கரி, கல்வி, மனவளக் கலை பயிற்றுனர் நிர்மலா, தொழிலதிபர்- ராஜலட்சுமி, தொழில் முனைவோர்- மீனவர்த்தினி, சாந்தா ஆகியோருக்கு சாதனை பெண்டிர் விருதும் வழங்கினார்.
வாசகர் கருத்து