பிரிவினையை விதைப்பது தி.மு.க.,வும் காங்கிரசும் தான்: சரத்குமார்
"எதிர் அணியில் யார் பிரதமர் வேட்பாளர் எனத் தெரியவில்லை. ஒவ்வொரு அணிக்கும் ஒரு தலைவர் இருப்பார். ஆனால், எதிர் அணியில் உள்ள கப்பல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது" என, நடிகர் சரத்குமார் பேசினார்.
கரூர் பா.ஜ., வேட்பாளர் செந்தில் நாதனை ஆதரித்து சரத்குமார் பேசியதாவது:
10 ஆண்டுகளில் சிறந்த ஆட்சியை மோடி கொடுத்திருக்கிறார். மக்களுக்கு செய்த திட்டங்களை எடுத்துக் காட்டி தைரியமாக ஓட்டு கேட்டு வருகிறோம். உலகளவில் 11வது இடத்தில் இருந்த இந்திய பொருளாதாரத்தை 5வது இடத்துக்கு மோடி கொண்டு வந்தார்.
தமிழகத்தில் பா.ஜ.,வுக்கு எம்.பி., இல்லாதபோதும் கூட பல லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களை செயல்படுத்தினார். விவசாயிகளிடம் இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக 32 ரூபாய்க்கு அரிசியை கொள்முதல் மாநில அரசுக்கு 3 ரூபாய்க்கு மத்திய அரசு கொடுக்கிறது.
இவர்கள் அதில் போட்டோ ஒட்டி தாங்கள் கொடுப்பதாக கூறுகினறனர். மத்திய அரசின் அனைத்து திட்டங்களும் மறக்கடிக்கப்படுகின்றன. இது லோக்சபா தேர்தல். எதிர் அணியில் யார் பிரதமர் வேட்பாளர் எனத் தெரியவில்லை. ஒவ்வொரு அணிக்கும் ஒரு தலைவர் இருப்பார். ஆனால், எதிர் அணியில் உள்ள கப்பல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
எந்தவொரு ஊழல் குற்றச்சாட்டையும் சுமத்த முடியாத அளவுக்கு பா.ஜ., ஆட்சி செயல்பட்டது. இங்கு நடப்பது எல்லாமே ஊழல் தான். ஒருவர் உள்ளே போய்விட்டு வெளியே வந்து அமைச்சர் ஆனார். மற்றவர்கள் எப்போது உள்ளே போவார்கள் எனத் தெரியவில்லை.
ஜே.பி.நட்டா கூறியதைப் போல, பாதிப் பேரு ஜெயிலிலும் மீதிப் பேர் பெயிலிலும் உள்ளனர். இன்றைக்கு இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி திசைமாறிச் செல்கின்றனர். கல்லிக்கேற்ற வேலையும் வேலைக்கேற்ற ஊதியம் வேண்டும். இளைஞர்களை வழிநடத்த மோடியால் மட்டுமே முடியும்.
இந்தியாவின் பெருமையை மோடி உலகறிய செய்திருக்கிறார். ரஷ்யா-யுக்ரேன் போரை நிறுத்தும் அளவுக்கு வல்லமை உள்ளவராக மோடி இருக்கிறார். கச்சத்தீவை மோடியால் மட்டுமே மீட்டுக் கொண்டு வர முடியும். 10 ஆண்டுகளில் எத்தனை முறை மோடி வந்திருப்பார்?
ஒருமுறையாவது, 'கச்சத்தீவை மீட்டுக் கொடுங்கள்' என இவர்கள் கேட்டார்களா. தி.மு.க., ஊழல் மிகுந்த ஆட்சியாக உள்ளது. ஒரு சாதாரண தொண்டன் தி.மு.க.,வில் அமைச்சராக ஆக முடியுமா. பா.ஜ.,வில் அப்படியல்ல.
'சிறுபான்மை சிறுபான்மை' எனக் கூறி இண்டியா கூட்டணியினர் பிரிவினையை விதைக்கிறார்கள். மோடி மீது இஸ்லாமிய மக்களுக்கு நம்பிக்கை வந்துவிட்டது. பிரிவினையை விதைப்பது தி.மு.க.,வும் காங்கிரசும் தான். தேசத்தைப் பற்றி சிந்திக்கும் மோடியின் ஆட்சி வரவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து