அம்பானி குடும்ப திருமணம் தான் முக்கியமா: ஊடகங்களை சாடிய ராகுல்
"ஊடகங்களின் பணி என்பது பொதுமக்களின் குரலை உயர்த்துவது தான். ஆனால், ஒரு போதும் பொதுப் பிரச்னைகளைப் பற்றி ஊடகங்கள் பேசுவதில்லை" என, காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தி பேசினார்.
ராஜஸ்தான் மாநிலம் பிகானிரில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:
என்னுடைய பாதயாத்திரையில் ஆயிரக்கணக்கான மக்களிடம் நான் கேட்ட ஒரே பிரச்னை, வேலையில்லா திண்டாட்டம் தான். வேலையில்லா திண்டாட்டமும் பணவீக்கமும் நாட்டின் மிகப் பெரிய பிரச்னைகளாக உள்ளன.
ஆனால், ஊடகங்களைப் பார்த்தால் அம்பானி குடும்பத்தில் நடக்கும் திருமணத்தைத் தான் மிகப் பெரிய செய்தியாக வெளியிடுவார்கள். மோடியின் முகம் மட்டும் 24 மணிநேரமும் ஊடகங்களில் தெரியும். அவர்கள் சில சமயம் கடலுக்கு அடியில் செல்வார்கள். சில நேரங்களில் விமானத்தில் பறந்து செல்வார்கள்.
நானும் இதே கேள்வியை சில ஆண்டுகாலம் கேட்டுக் கொண்டிருந்தேன். ஊடகங்களின் பணி என்பது பொதுமக்களின் குரலை உயர்த்துவது தான். ஆனால், ஒரு போதும் பொதுப் பிரச்னைகளைப் பற்றி ஊடகங்கள் பேசுவதில்லை. அதை அவர்களின் உரிமையாளர்கள் அனுமதிக்க மாட்டார்கள்.
நாட்டின் ஊடகங்கள் 15 முதல் 20 பேரின் கட்டுப்பாட்டில் உள்ளது. நாட்டில் உள்ள 70 கோடி மக்களிடம் இருக்கும் பணம், வெறும் 22 பெரும் கோடீஸ்வரர்களிடம் இருக்கிறது.
தங்களின் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வேண்டும் என விவசாயிகள் போராடுகிறார்கள். தங்களுக்கு வேலைவாய்ப்பு வேண்டும் என இளைஞர்கள் கேட்கிறார்கள். குடும்பத் தலைவிகளோ, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்கிறார்கள்.
ஆனால், நாட்டின் விவசாயிகளை பயங்கரவாதிகள் என பிரதமர் மோடி கூறுகிறார். இந்தியாவின் வரலாற்றிலேயே முதல்முறையாக நமது விவசாயிகள் வரியைக் கட்டுகிறார்கள்.
ஒவ்வோர் ஆண்டும் 2 கோடிப் பேருக்கு வேலைவாய்ப்புத் தருவதாக மோடி கூறியிருந்தார். அவர் கூறியபடியே வேலைவாய்ப்பை தரவில்லை. இண்டியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் இளைஞர்களுக்கு ஓராண்டு தொழிற்பயிற்சியும் ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாயையும் கொடுப்போம். அவர்கள் சிறப்பாக பணியாற்றினால் வேலை உறுதி செய்யப்படும்.
அரசில் 30 லட்சம் காலிப்பணியிடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவோம். இவை கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் மகிழ்ச்சியை கொடுக்கும். அரசில் ஒப்பந்த முறையை முடிவுக்கு கொண்டு வருவோம்.
அரசாங்கத்தில் யார் வேலை செய்தாலும் அவர்களுக்கு வேலை நிரந்தரமாக்கப்படும். விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.
வாசகர் கருத்து