காங்கிரஸ் தேர்தல் அறிக்கை திவாலான வங்கியின் காசோலை: ராஜ்நாத் சிங்
"காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இருந்ததைப் போன்ற நிலை தற்போது இல்லை. இந்தியா உலக அரங்கில் பொருளாதாரத்தில் வலிமையான நாடாக மாறியுள்ளது. இதை உலக நாடுகளும் ஒப்புக் கொள்கின்றன" என, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
மதுரையில் ஊடக நிறுவனம் ஒன்றுக்கு ராஜ்நாத் சிங் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:
இந்தியாவை 2047க்குள் வளர்ச்சியடைந்த நாடாக மாற்ற வேண்டும் என்பது தான் தேசிய ஜனநாயக கூட்டணியின் இலக்கு. ஆனால், இண்டியா கூட்டணியில் உள்ள காங்கிரசின் தேர்தல் அறிக்கையை பார்த்தால் நாடு பின்னோக்கிச் சென்றுவிடும்.
பா.ஜ., ஆட்சியில் ராணுவ தளவாட உற்பத்தியில் வலிமையான நாடாக உருவெடுத்துள்ளோம். அனைத்து வகையான ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளை இந்தியா இறக்குமதி செய்து கொண்டிருந்தது. தற்போது இவற்றை எல்லாம் நாம் ஏற்றுமதி செய்து வருகிறோம்.
2014ல் 600 கோடி ரூபாயாக இருந்த தளவாட உற்பத்தி ஏற்றுமதியின் மதிப்பு மற்போது 31,000 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. மோடி அரசின் மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டையும் சுமத்த முடியாது. ஆனால், காங்கிரஸ் ஆட்சியில் பாதுகாப்புத் துறையிலேயே ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
காங்கிரசின் ஆட்சியில் பயங்கரவாத சம்பவங்கள் அதிகளவில் நடந்தன. ஆனால், மோடியின் ஆட்சியில் பயங்கரவாத சம்பவங்களை நடக்கவிடாமல் கடுமையான நடவடிக்கையின் மூலம் ஏறக்குறைய ஒழித்துவிட்டோம். இதனை நமது பக்கத்து நாடுகளும் உணர்ந்துள்ளன. நம்மை அச்சுறுத்துவதற்கு யார் வந்தாலும் அதற்கு உரிய பதிலடியை கொடுத்து வருகிறோம்.
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இருந்ததைப் போன்ற நிலை தற்போது இல்லை. இந்தியா உலக அரங்கில் பொருளாதாரத்தில் வலிமையான நாடாக மாறியுள்ளது. இதை உலக நாடுகளும் ஒப்புக் கொள்கின்றன.
காங்கிரசின் தேர்தல் அறிக்கை என்பது ஒரு பிற்போக்குத்தனமான ஒன்று. அது நாட்டை பின்னோக்கி கொண்டு செல்லக் கூடியது. ஆனால், பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கைகள் முற்போக்கானவை.
இரண்டுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. காங்கிரசின் தேர்தல் அறிக்கைக்கும் திவாலான வங்கியின் காசோலைக்கும் வித்தியாசம் இல்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வாசகர் கருத்து