தி.மு.க.,வும் காங்கிரசும் குடும்பத்துக்கான கட்சிகள்: ராஜ்நாத் சிங்
"சுதந்திரத்துக்கு பின் ஆட்சிக்கு வந்த அரசுகள் நாட்டுக்குத் தேவையான வளர்ச்சிக்காக செயல்படவில்லை. மோடி தலைமையில் கடந்த 10 ஆண்டுகளில் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது" என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.
நாகையில் நடந்த பிரசார கூட்டத்தில் ராஜ்நாத் சிங் பேசியதாவது:
புதிய பார்லிமென்ட்டில் செங்கோல் நிறுவப்பட்டதன் மூலம் நாட்டின் புதிய சகாப்தத்தின் துவக்கத்தை குறிக்கிறது. செங்கோல் நிறுவியதன் வாயிலாக தமிழ் கலாசாரம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
முதன் முறையாக ஐக்கிய நாடுகள் சபையில் தமிழில் மோடி பேசினார். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதை நினைவில் வைத்துப் பேசினார். சுதந்திரத்துக்கு பின் ஆட்சிக்கு வந்த அரசுகள் நாட்டுக்குத் தேவையான வளர்ச்சிக்காக செயல்படவில்லை. மோடி தலைமையில் கடந்த 10 ஆண்டுகளில் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது.
உலகின் 5வது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறியுள்ளது. உலகம் முழுவதிலும் இருந்து நாட்டுக்கும் தமிழகத்துக்கும் நல்ல முதலீடுகள் வரத் துவங்கி உள்ளன. சீனாவுக்கு அடுத்தபடியாக மொபைல் போன் இறக்குமதியில் இரண்டாவது நாடாக இந்தியா மாறி உள்ளது.
பாதுகாப்பு தொடர்பான பொருள்களை வெளியில் இருந்து இறக்குமதி செய்தோம். ஐ.என்.எஸ் விக்ராந்த் போன்ற போர்க் கப்பலை உற்பத்தி செய்து மற்ற நாடுகளுக்கும் அனுப்பி வருகிறோம். 2014ல் 600 கோடியாக பாதுகாப்பு தொடர்பான ஏற்றுமதி இருந்தது, இப்போது 26 ஆயிரம் கோடியை எட்டியுள்ளது.
மலிவான இணையதள சேவை இந்தியாவில் மட்டுமே கிடைக்கிறது. இதன் விளைவாக சிறிய பரிவர்த்தனையை கூட அனைவராலும் செய்ய முடிகிறது. காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் செய்தவர்கள் இன்று ஜெயிலில் இருக்கிறார்கள்.
காங்கிரஸ் ஆட்சியில் 100 பைசா மக்களுக்கு செல்ல வேண்டும் என்றால் 14 பைசா அரசியல்வாதிகளும் 6 பைசாவை ஊழல் செய்பவர்களும் பெற்றனர். மோடி ஆட்சியில் ஒரு பைசா குறையாமல் மக்களை சென்றடைகிறது.
வாக்குகளை பெறுவதற்காகவோ, ஆட்சி அமைக்கவோ நாங்கள் அரசியல் செய்யவில்லை. 1.25 லட்சம் ஸ்டார்ட்அப் நிறுவனங்களை இளைஞர்கள் துவங்க வாய்ப்பளித்த அரசு பா.ஜ., நாட்டில் உள்ள மக்கள் தொகை பெரும்பான்மையான இளைஞர்களை சார்ந்துள்ளது.
வேலை தேடும் இளைஞர்களாக இல்லாமல் வேலை தரும் இளைஞர்களாக அவர்களை பா.ஜ., அரசு மாற்றியுள்ளது. நாட்டில் பல பிரச்னைகள் உருவாக காங்கிரஸ் காரணமாக இருந்துள்ளது.
இலங்கையில் தமிழர்களுக்கு நடந்த அநீதிக்கும் கச்சத்தீவு இழப்புக்கும் மீனவர் சமூக பிரச்னைக்கும் முழு பொறுப்பு தி.மு.க.,வும் காங்கிரசும் தான். இந்திய மீனவர்களின் கச்சத்தீவை இலங்கைக்கு பரிசாக கொடுத்தது, இண்டியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ்.
இவர்கள் எந்த முகத்துடன் தமிழர் உரிமையைப் பற்றிப் பேசுகிறார்கள். இண்டியா கூட்டணிக்குள் தேர்தலுக்கு முன்பே சண்டை துவங்கிவிட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, நாமக்கல்லில் பா.ஜ., வேட்பாளர் கே.பி.ராமலிங்கத்தை ஆதரித்துப் பேசிய ராஜ்நாத் சிங், "தி.மு.க.,வும் காங்கிரசும் தங்களின் குடும்பத்துக்காக அரசியல் செய்து வருகின்றன. ஆனால், பிரதமர் மோடி நாட்டுக்காக உழைத்து வருகிறார். அவரது கரத்தை வலுப்படுத்தும் வகையில் பா.ஜ., வேட்பாளரை தமிழக மக்கள் ஆதரிக்க வேண்டும்" என்றார்.
வாசகர் கருத்து