ஒன்று ஜெயில்... இல்லாவிட்டால் பெயில்: இண்டியா கூட்டணியை சாடிய நட்டா
"தமிழக மக்கள் மீது மோடி அளவுகடந்த அக்கறையையும் பாசத்தையும் வைத்திருக்கிறார். கடந்த காலங்களில் காங்கிரஸ் ஆட்சி கொடுத்த நிதியை விட 4 மடங்கு அதிக நிதியை தமிழகத்துக்கு மோடி கொடுத்திருக்கிறார்" என, பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்தார். கரூரில் பா.ஜ., வேட்பாளர் செந்தில் நாதனை ஆதரித்து நடந்த பிரசார கூட்டத்தில் பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
தமிழக மண் பல்வேறு நாயன்மார்களையும் கலாசாரத்தையும் கொண்ட பூமி. திருவள்ளுவரும் பாரதியும் பிறந்த பூமி. அவர்கள் தங்களின் படைப்புகள் மூலம் தமிழக மக்களின் பண்பாட்டை வெளியுலகுக்கு கொண்டு சென்றனர்.
பிரதமர் மோடி எங்கு சென்றாலும் தமிழ் பண்பாட்டையும் கலாசாரத்தையும் பற்றிப் பேசுகிறார். மோடிக்கு விருப்பமான பகுதியாக தமிழகம் இருக்கிறது. காசி தமிழ்ச் சங்கமத்தை ஏற்படுத்தி ஒற்றுமையை ஏற்படுத்தியவர் மோடி. பார்லிமென்டில் தமிழகத்தின் செங்கோலை நிறுவினார்.
எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருதை வழங்கி தமிழகத்துக்கு பிரதமர் மோடி சிறப்பு சேர்த்தார். 2019ல் கொரோனாவை சந்தித்தோம். யுக்ரேன் போரும் ஏற்பட்டது. ஆனாலும், பொருளாதார வளர்ச்சியில் 11வது இடத்தில் இருந்து 5வது இடத்துக்கு வந்துள்ளோம்.
மீண்டும் மோடி வந்தால் உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாறுவோம் என்பதில் சந்தேகமில்லை. முன்பெல்லாம் செல்போன் என்றாலே 'மேட் இன் சைனா' என்று இருந்தது. இன்று 'மேட் இன் இந்தியா' என இருக்கிறது.
கார் உற்பத்தியில் ஜப்பானை தான் சொல்வார்கள். அதிலும், இன்று இந்தியாவில் உற்பத்தி செய்து 2வது இடத்தில் இருக்கிறோம். எஃகு உற்பத்தியில உலக நாடுகளுடன் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறோம்.
மருந்து உற்பத்தியில் 138 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளோம். ரசாயன உற்பத்தியில 106 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளோம். இதெல்லாம் மோடி ஆட்சியின் சாதனைகள்.
ஏழைகள், மகளிர், இளைஞர்கள், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்கள் என அனைவருக்குமான திட்டங்களை மோடி செயல்படுத்தியுள்ளார். கரீப் கல்யாண் யோஜனா மூலம் மாதம் 5 கிலோ அரிசி, 5 கிலோ கோதுமை, ஒரு கிலோ பருப்பு ஆகியவற்றை மத்திய அரசு கொடுக்கிறது. வறுமைக்கோட்டுக்கு கீழ் இருந்த 25 கோடி மக்களை மீட்டுள்ளோம்.
விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 நிதியை மோடி அரசு கொடுத்தது. பெண்களின் முன்னேற்றத்துக்கு 10 கோடி இலவச எரிவாயு இணைப்புகளை வழங்கியுள்ளோம். இந்த திட்டத்தில் கரூர் மாவட்டத்தில் மட்டும் 2 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர்.
ஜல்ஜீவன் திட்டத்தில் தமிழகத்தில் 80 லட்சம் மக்கள் பயன்பெற்றுள்ளனர். பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் தமிழகத்தில் 14 லட்சம் வீடுகளைக் கட்டிக் கொடுத்துள்ளோம். ஆயுஷ் மான் பாரத் திட்டத்தில் 40 சதவீதம் மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.
தமிழக மக்கள் மீது மோடி அளவுகடந்த அக்கறையையும் பாசத்தையும் வைத்திருக்கிறார். கடந்த காலங்களில் காங்கிரஸ் ஆட்சி கொடுத்த நிதியை விட 4 மடங்கு அதிக நிதியை தமிழகத்துக்கு மோடி கொடுத்திருக்கிறார்.
இண்டியா கூட்டணி, ஊழல் மிகுந்த கூட்டணியாக உள்ளது. நாங்கள் மோடியின் சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்கிறோம். ஆனால் அவை குடும்ப கட்சியாகவும் ஊழல் கட்சியாகவும் உள்ளன.
தி.மு.க என்றாலே கொள்ளையடிக்கும் கட்சி. வாரிசு அரசியலை நடத்தும் கட்சி. காங்கிரசும் இவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல. ஹெலிகாப்டர் ஊழல், காமன்வெல்த், 2ஜி என தொடர்ந்து ஊழல் செய்தனர்.
சோனியா, ராகுல், பிரியங்கா காந்தி ஆகியோர் குடும்ப கட்சியாகவும் ஊழல் செய்தவர்களாகவும் உள்ளனர். சரத் பவார்- சுப்ரியா சுலே, பீகாரில் லாலு - தேஜஸ்வி, தி.மு.க.,வில் ஸ்டாலின் - உதயநிதி. இவர்கள் குடும்ப கட்சிகள் தானே... ஊழல் செய்யவில்லையா?
சிதம்பரமும் கார்த்தி சிதம்பரமும் குடும்ப கட்சிகள் இல்லையா.. ஊழல் செய்யவில்லையா. தெலங்கானா முன்னாள் முதல்வரின் மகளான கவிதாவும் கெஜ்ரிவாலும் சேர்ந்து மதுபான கொள்கையில் ஊழல் செய்தனர். ஒன்று இவர்கள் சிறையில் இருப்பார்கள் அல்லது பெயிலில் இருப்பார்கள். இவர்கள் சனாதனத்தை இழிவாக பேசியவர்கள். இவர்களுக்கு நாம் வாய்ப்பு கொடுக்க வேண்டுமா?
இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து