Advertisement

மேலே அமைச்சர்; கீழே வேட்பாளர்: வடசென்னை தி.மு.க., களேபரம்

வடசென்னை லோக்சபா தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் கலாநிதிவீராசாமிக்கும், ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கும் இடையே நடக்கும் பனிப்போர் அப்பட்டமாக வெளிச்சத்துக்கு வந்துஉள்ளது.

வடசென்னையின் லோக்கல் அமைச்சராக இருக்கும் சேகர்பாபுவுக்கு, வடசென்னை தொகுதியின் மூலை முடுக்குகளில் இருக்கும் மக்களிடம் நல்ல பரிச்சயம் உண்டு.

அதனால், வடசென்னை தொகுதியின் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் சேகர்பாபு, தி.மு.க., வேட்பாளர் கலாநிதி வீராசாமியுடன் விடாமல் தேர்தல் பிரசாரத்தில் சென்று வந்தார்.

துவக்கத்தில் இணைந்தே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட இருவரும், தற்போது முட்டல், மோதலில் ஈடுபட்டு இருப்பது கட்சியினரை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.

இருவரும் தனித்தனியாக பிரசாரம் செய்து வந்தாலும், அவ்வப்போது மட்டும் இணைந்து தேர்தல் பிரசாரம் செய்கின்றனர். இணைந்து செய்யும் பிரசாரத்தில், கலாநிதி பிரசார வாகனத்தில் மேல் ஏறி நின்றால், அமைச்சர் சேகர்பாபு கீழே இறங்கி நடந்து செல்கிறார்.

முட்டல், மோதல்



சேகர்பாபு வாகனத்தின் மேல் ஏறி நின்றபடி சென்றால், கலாநிதி கீழே இறங்கி நடக்கிறார்.

இணைந்தே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதை கண்ட கட்சியினர், இப்போது காட்சி வேறு மாதிரி இருப்பது கண்டு அதிர்ந்து போய் உள்ளனர்.

இதுகுறித்து, வட சென்னை தி.மு.க.,வினர் கூறியதாவது:

துவக்கத்தில் வேட்பாளர் கலாநிதி வீராசாமியும் அமைச்சர் சேகர்பாபுவும் இணைந்தே தேர்தல் பிரசாரம் செய்தனர். ஆனால், போகப்போக வேட்பாளரை துச்சமாக மதித்து செயல்படத் துவங்கினார் சேகர்பாபு.

எந்த விஷயத்தையும், முழுமையாக வேட்பாளரிடம் சொல்லாமல் தன்னிச்சையாக செயல்பட்டார். பொறுமையாக இருந்த வேட்பாளர் கலாநிதியால், ஒரு கட்டத்துக்கு மேல் பொறுக்க முடியவில்லை.

அமைச்சரிடம் தன் முகத்தைக் காட்டினார். இதனால் இருவருக்கும் முட்டல், மோதல் துவங்கியது. வேட்பாளர் ஒருபக்கமும், அமைச்சர் வேறொரு பக்கமும் பிரசாரம் செய்ய வேண்டியதானது.

அதுமட்டுமல்ல, சமீபத்தில் பொறுப்புக்கு வந்த தி.மு.க., வடசென்னை மாவட்ட தலைவர் ஆர்.டி.சேகர் பொறுப்பில் உள்ள ராயபுரம், பெரம்பூர், ஆர்.கே.நகர் தொகுதிகளில், தேர்தல் பிரசாரம் செய்வதற்கு சேகர்பாபு தீவிரம் காட்டவில்லை.

அதேநேரம், தன் பொறுப்பில் இருக்கும் கொளத்துார், திரு.வி.க.நகர் மற்றும் எழும்பூர் பகுதியில் மட்டுமே சேகர்பாபு பிரசாரத்தில் கவனம் செலுத்தினார். இதுவும் வேட்பாளர் கலாநிதிக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது.

அதனால், அமைச்சரோடு சேர்ந்து பிரசாரம் செய்வதை தவிர்த்து விட்டு, தன்னிச்சையாக பிரசாரத்தில் களம் இறங்கினார் கலாநிதி. புரிந்து கொண்ட அமைச்சர் சேகர்பாபு, தன்பாட்டுக்கு மேயர் ப்ரியாவுடன் இணைந்து தேர்தல் பிரசாரத்தில் தொகுதியை வலம் வந்தார்.

சமீபத்தில் திரு.வி.க.நகருக்கு பிரசாரத்திற்கு காங்., தலைவர் செல்வப்பெருந்தகை வந்தார். ஆனால், அந்த பிரசாரத்துக்கு கலாநிதி வரவில்லை. சேகர்பாபு மட்டுமே வந்தார்.

உரசலுக்கு காரணம்



இந்த விவகாரம், மேலிடம் வரை சென்றதோ என்னவோ, மறுநாள் அதே பகுதியில் வேட்பாளரும்; அமைச்சரும் இணைந்து பிரசாரம் மேற்கொண்டனர். ஆனால், வேட்பாளர் வேனிலும், சேகர்பாபு நடந்தும் சென்றபடியே பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

சேகர்பாபு தரப்பில் தேவையில்லாமல் தரப்பட்ட அழுத்தம் காரணமாகவே வேட்பாளரிடம் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தன் விருப்பத்துக்கேற்ப தான் பிரசாரம் நடக்க வேண்டும் என்பது அமைச்சர் விருப்பம். அதை வேட்பாளர் விரும்பவில்லை.

தொகுதியில் பெரும்பாலான இடங்களில், வேட்பாளருக்கு ஓட்டளிக்க கேட்டு ஒட்டப்பட்ட போஸ்டர்களில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி படத்தோடு, அமைச்சர் சேகர்பாபு படம் பிரதானமாக இடம்பெற்றது. ஆனால், வேட்பாளர் படம் சிறிதாக இடம்பெற்றது. இதுவும் இரு தரப்புக்குமான உரசலுக்குக் காரணம்.

இவ்வாறு அக்கட்சியினர் கூறினர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்