கரை ஏறுவாரா அமைச்சர் மகன்? ஆதரவாளர்களை 'ஆப்சென்ட்' ஆக்கிய மாஜி
பெரம்பலுார் லோக்சபா தொகுதியில் தி.மு.க., வேட்பாளராக போட்டியிடும் மூத்த அமைச்சர் நேருவின் மகன் அருண் நேருவை தோற்கடிக்க முன்னாள் அமைச்சர் மறைமுகவேலை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது
பெரம்பலுார் லோக்சபா தொகுதியில் தி.மு.க., சார்பில் மூத்த அமைச்சர் நேருவின் மகன் அருண் நேரு வேட்பாளராக போட்டியிடுகிறார். இவர், இங்கு வெற்றி பெற்றால் அமைச்சர் நேருவின் ஆதிக்கம் பெரம்பலுார் மாவட்ட தி.மு.க.,வில் அதிகரித்து, தனது வளர்ச்சியை பாதிக்கும் என பயந்த முன்னாள் அமைச்சர் பெரம்பலுார் தொகுதியை கூட்டணி கட்சிக்கு ஒதுக்கி, நேருவின் திட்டத்தை முறியடிக்க முயன்றதாக கூறுகின்றனர்.
லோக்கல் தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
ஓராண்டுக்கு முன்பாகவே, பெரம்பலுார் லோக்சபா தொகுதியில் தன் மகனை களமிறக்க முடிவெடுத்து, கட்சித் தலைமையை சம்மதிக்க வைத்த அமைச்சர் நேரு, அடுத்த கட்டமாக, தொகுதியையும் மகனுக்கு சாதகமாக கொண்டு வரும் பணியில் இறங்கினார்.
இதை அறிந்த பெரம்பலுார் மண்ணுக்கு சொந்தக்காரர் ஆன அந்த முன்னாள் அமைச்சர், இதை தடுக்க முடிவெடுத்தார். ஒருவேளை, நேரு எண்ணப்படி நடந்து, அருண் நேரு எம்.பி.,யாகி விட்டால், லோக்கல் தி.மு.க.,வில் தன் கரங்கள் தளர்ந்துவிடும் என அச்சப்பட்டார் மாஜி அமைச்சர்.
அருண் நேருவுக்கு பெரம்பலுார் தொகுதி, தி.மு.க, தலைமையால் ஒதுக்கப்பட்டு விடக் கூடாது என்பதற்காக, நடிகர் கமல், துரை வைகோ, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருநாவுக்கரசு, அசோக் வரதராஜன், வி.சி.,யின் ஆதவ் அர்ஜூனா ஆகியோரில் ஒருவரை தி.மு.க., தரப்பிலான வேட்பாளராக களம் இறக்கி விட வேண்டும் எனவும் தீவிரமாக முயன்றுள்ளார் மாஜி.
இதற்காக சம்பந்தப்பட்டவர்களிடம் பேசி, 'பெரம்பலுார் தொகுதியை தி.மு.க., தலைமையிடம் கேளுங்கள்; நானும் சிபாரிசு செய்கிறேன். ஒருவேளை 'சீட்' கிடைத்தால் வெற்றியடைய வைக்க வேண்டியது என் வேலை.
என் ஆதரவாளர்கள் வாயிலாக, முழு தேர்தல் பணியையும் பார்த்துக் கொள்கிறேன்' என்று அனைவரையும் உசுப்பி விட்டார். ஆனால், அவரது முயற்சி பலிக்கவில்லை.
இருந்தபோதும், கட்சித் தலைமை அருண் நேருவையே பெரம்பலுார் வேட்பாளராக அறிவித்து விட, தொகுதிக்குள் இருக்கும் தன் ஆதரவு நிர்வாகிகளை தான் போட்டியிடும் தொகுதியின் தேர்தல் பணிக்காக அழைத்துச் சென்று விட்டார்.
அங்கு அவர்கள் போய் விட்டதால், பெரம்பலுாரில் அருண் நேருவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய தி.மு.க.,வில் பொறுப்பாளர்கள் இல்லை. மீதமிருக்கும் ஒரு சில நிர்வாகிகளும் அமைதியாகி விட்டனர்.
லோக்கல் எம்.எல்.ஏ.,வான பிரபாகரன், மாவட்ட பொறுப்பாளர் ஜெகதீசன் ஆகியோர் மட்டும், அருண் நேருவுடன் தேர்தல் பிரசாரத்தில் சுழல்கின்றனர்.
பிரசாரத்துக்கு செல்லும் இடங்களில் அருண் நேரு மற்றும் பிரபாகரனை மக்கள் கடுமையாக எதிர்க்கின்றனர்.
மேட்டுப்பாளையம், எறையூர் நரிக்குறவர் காலனி, வி.களத்துார், விளாமுத்துார் போன்ற கிராமங்களில் பிரசாரத்துக்கு சென்ற அருண் நேருவையும், எம்.எல்.ஏ., பிரபாகரனையும் மறித்துள்ளனர்.
'நன்றி சொல்லக்கூட வராத எம்.எல்.ஏ., மீண்டும் ஓட்டு கேட்டு வரலாமா? குடிநீர் வசதி, சாலை வசதி, போக்குவரத்து வசதி செய்து தரல'ன்னு சரமாரியா கேள்வி கேட்டுள்ளனர். சில இடங்களில் ஊருக்குள் விடாமல் திருப்பி அனுப்பி உள்ளனர். இதெல்லாமே துாண்டுதலில் நடப்பவைதான்.
ஆனால், இதையெல்லாம் கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் திருச்சியில் இருந்து தன் ஆதரவாளர்களை அழைத்து வந்து மகனுக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளார் அமைச்சர் நேரு.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாசகர் கருத்து