நீல நிறமா... வெள்ளை நிறமா? தி.மு.க., கூட்டணியில் புகைச்சல்
தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஆதி தமிழர் பேரவையினருக்கு, தி.மு.க.,வினரால் தர்மசங்கட நிலை ஏற்பட்டிருக்கிறது.தி.மு.க., கூட்டணியில், ஆதி தமிழர் பேரவை இடம் பெற்றுள்ளது. இதன் நிறுவனர் அதியமான், கடந்த சட்டசபை தேர்தலில், திருப்பூர் மாவட்டம், அவிநாசி தனி சட்டசபை தொகுதியில், தி.மு.க., கூட்டணி வேட்பாளராக களமிறக்கப்பட்டு, 65,513 ஓட்டுகளை பெற்றார்; மொத்தம் பதிவான ஓட்டுகளில் இது, 31 சதவீதம்.
தாழ்த்தப்பட்டோரின் கோரிக்கை, உரிமைகளை பெற்றுத் தருவதாக கூறும் இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள், நீல நிறச்சட்டை அணிவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
கடந்த சட்டசபை தேர்தலில், வெள்ளைச் சட்டை அணிந்து, பிரசாரத்திற்கு வருமாறு, உள்ளூர் தி.மு.க.,வினர் நிர்ப்பந்தப்படுத்தியதால், வேட்பாளர் அதியமான், வெள்ளைச் சட்டைக்கு மாறினார். அமைப்பினரும் வெள்ளை சட்டைக்கு மாறினர்.
லோக்சபா தேர்தலில், நீலகிரி லோக்சபா தொகுதி தி.மு.க., வேட்பாளர் ராஜாவுக்கு ஆதரவாக, ஆதி தமிழர் பேரவையினர் பிரசாரம் செல்ல துவங்கியுள்ளனர். 'நீல நிறச்சட்டையை கழற்றிவிட்டு, வெள்ளை நிற சட்டை அணிந்து செல்லுங்கள்' என, தி.மு.க.,வினர், கடந்த சட்டசபை தேர்தலை போலவே நிர்ப்பந்தம் கொடுக்க துவங்கியுள்ளனர்.
இதனால், மீண்டும் அவர்களுக்கு தர்ம சங்கட நிலை ஏற்பட்டிருக்கிறது.'இது, எங்களின் அடையாளத்தை இழக்க செய்யும் செயல்' என புலம்பும் ஆதித்தமிழர் பேரவையினர், தி.மு.க., வேட்பாளர் ராஜாவின் கவனத்துக்கு விவகாரத்தை கொண்டு செல்ல, 'அவர்களை சுதந்திரமாக பணி செய்ய விடுங்கள்,' என, அறிவுறுத்தியுள்ளார் ராஜா.
வாசகர் கருத்து