சேற்றை வாரி வீசும் பிரசாரம் இல்லை: ஆச்சரியமளிக்கும் வட கிழக்கு மாநிலங்கள்
இந்த பிரச்னைக்கு நீங்கள்தான் காரணம், உங்கள் ஆட்சியில் என்ன செய்தீர்கள், இத்தனை காலம் என்ன செய்தீர்கள், தேர்தல் வந்தால்தான் இந்தப் பிரச்னை கண்ணுக்கு தெரியுமா என்று, தேர்தலின்போது, அரசியல் கட்சிகள், மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைப்பது, நம் நாட்டில் ஒரு பாரம்பரியமாக மாறிவிட்டது.
வீடு வீடாக
ஆனால், இதுபோன்ற தனிநபர் விமர்சனங்கள், ஒருவரை தாக்கி பேசுவது, சேற்றை வாரி வீசுவது போன்ற பிரசாரங்கள், வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா மற்றும் மிசோரமில் கிடையாது. அங்கு பிரமாண்ட பிரசார கூட்டங்கள் போன்றவையும் நடப்பதில்லை.
வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்வது, தங்களது பலம் என்ன, தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டால் என்ன செய்வோம் என்பது குறித்து மட்டுமே வேட்பாளர்கள் பேசுவர்.
இந்த இரண்டு மாநிலங்களிலும், கிறிஸ்துவர்கள் பெரும்பான்மையினராக உள்ளனர். மேகாலயாவில் உள்ள இரண்டு தொகுதிகள் மற்றும் மிசோரமில் உள்ள ஒரு தொகுதிக்கு, முதற்கட்டமான ஏப்., 19ல் தேர்தல் நடக்க உள்ளது.
விவாத நிகழ்ச்சி
மேகாலயாவின் ஷில்லாங் தொகுதியில், காங்கிரஸ் மாநில தலைவரும், தற்போதைய எம்.பி.,யுமான வின்சன்ட் பாலா போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, தேசிய மக்கள் கட்சியின் டாக்டர் மசேல் அம்பரீன் லிங்டாங் போட்டியிடுகிறார். கடந்தாண்டு லோக்சபா தேர்தலுக்கு முன், காங்கிரசில் இருந்து வந்த இவர், மாநில அமைச்சராக உள்ளார்.
துரா தொகுதியில், தேசிய மக்கள் கட்சியின் சிட்டிங் எம்.பி.,யான அகதா சங்மா, காங்.,கின் சலேங்க் சங்க்மாவை சந்திக்கிறார். தேசிய மக்கள் கட்சிக்கு, கூட்டணி கட்சியான பா.ஜ., பிரசாரம் செய்கிறது.
இந்த இரண்டு தொகுதிகளையும் சேர்த்து, மொத்தம், 22 லட்சம் வாக்காளர்களே உள்ளனர். ஒரே ஒரு தொகுதியுள்ள மிசோரமில், எட்டு லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
இங்கு தெருமுனை பிரசாரங்கள், வீடு வீடாக பிரசாரம் நடக்கும். இதைத் தவிர, நகரின் முக்கிய அரங்கில், கட்சி வேட்பாளர்கள் பங்கேற்று, வாக்காளர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பர். அது ஒரு விவாத நிகழ்ச்சியாக நடக்கும். ஆனால், தனிப்பட்ட விமர்சனங்கள் எழுப்பப்படாது.
வாசகர் கருத்து