தோள்பட்டையில் பட்டை கட்டிய துரை: பில்லி சூனியத்தை முறியடிக்கும் முயற்சியா?
கடந்த 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், தேசிய அளவில் மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் சந்திரசேகர ராவ் ஈடுபட்டார். அதற்கு மாநில கட்சிகளின் ஆதரவு பெற, சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பில்லி சூனியம், மாந்திரீகம், பழிவாங்கும் அசுரத்தனமான செயல்பாடுகளில் இருந்து, தன்னை பாதுகாத்துக் கொள்ள, 'இமாம் இ ஜமீன்' என்ற பாரம்பரியமிக்க பட்டுத் துணியை, தன் வலது கையில், கைப்பட்டையாக கட்டியிருந்தார்.
இந்நிலையில், சந்திரசேகர ராவை பின்பற்றி துரை வைகோவும், தன் இடது தோள்பட்டையில், அதே பாரம்பரியமிக்க பட்டுத் துணியால் ஆன கைப்பட்டை அணிந்துள்ளார். ஆனால், யாருக்கும் தெரியாமல் இருக்க, அவரது கட்சிக் கொடி நிறத்தில் அதை தயாரித்துள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து, ம.தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:
துரை வைகோவை தன் வாரிசாக, அரசியலுக்கு கொண்டு வந்ததில் இருந்து வைகோ பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறார். துரையின் அரசியல் பிரவேசத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, முன்னணி நிர்வாகிகள் துரைசாமி, செங்குட்டுவன், சண்முகசுந்தரம், செவந்தியப்பன், ஈஸ்வரன், அழகுசுந்தரம், டாக்டர் சந்திரசேகர் போன்றவர்கள் வெளியேறினர்.
முதன்மை செயலர் பதவி வகித்த துரை, தேர்தலில் போட்டியிட விரும்பாமல் இருந்தார். ஆனால், அவரை கட்சி நிர்வாகிகள் போட்டியிட வலியுறுத்தினர். தி.மு.க., இரண்டு தொகுதிகள் தந்தால், ஒரு தொகுதியில் துரையும், ஈரோட்டில் மறைந்த கணேசமூர்த்தியும் போட்டியிடலாம் என, வைகோ விரும்பினார்.
ஆனால், திருச்சி தொகுதி மட்டும் ஒதுக்கப்பட்டதால், அங்கு துரை போட்டி யிடுவார் என, அறிவித்ததும் அதிருப்தி அடைந்த கணேசமூர்த்தி தற்கொலை செய்து கொண்டார்.
தி.மு.க.,விலிருந்து வைகோ வெளியேறியபோது, ஐந்து பேர் தீக்குளித்து இறந்தனர். அதேபோல் துரைக்கு பதவி தர வலியுறுத்தி, ஒருவர் தீக்குளித்தார். எனவே, தீக்குளித்து இறந்தவர்களின் ஆன்மாக்களால், துரைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் தடுக்கும் வகையில், சந்திர சேகர ராவ் போல, கட்சி கொடி நிறத்தில் துரையும் கைப்பட்டை கட்டியுள்ளார்.
இவ்வாறு கட்சி வட்டாரங்கள் கூறின.
வாசகர் கருத்து