'கட்சி கொடியுடன் வந்தால் கவனிப்பு' கூட்டணிக்கு தி.மு.க., 'கண்டிஷன்'
தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ், வி.சி., - இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் - ம.தி.மு.க., - கொ.ம.தே.க., ஆகியவை இடம்பெற்றுள்ளன. கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்களிடம், 'உங்கள் கட்சி கொடியுடன் வந்தால் தான் நீங்கள் பிரசாரத்திற்கு வருவதாக கருதப்படும்; அதற்கு ஏற்ப, 'கவனிப்பு' செய்யப்படும்' என, தி.மு.க., நிர்வாகிகள் திடீர் நிபந்தனை விதிப்பதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
தி.மு.க., வேட்பாளருடன் தினமும் காலை, மாலை என, இரு வேளையிலும் பிரசாரத்திற்கு செல்வோருக்கு தலா, 500 ரூபாயும்; காலை டிபன், மதியசாப்பாடும் வழங்கப்படுகின்றன.
கூட்டணி கட்சிகளில் இருந்து, ஒவ்வொரு கட்சியிலும் எத்தனை நபர்கள் வந்தாலும், அவர்களுக்கு உரிய மொத்த தொகை, சம்பந்தப்பட்ட கட்சியின் பகுதி தலைவர் அல்லது செயலரிடம், வேட்பாளர் தரப்பில் இருந்து வழங்கப்படுகிறது.
வெயிலில், அதிக நேரம் கொடி பிடித்தபடி செல்ல சிரமமாக உள்ளது. இதனால், பலர் கட்சி கொடி இல்லாமல், பிரசாரத்திற்கு வருகின்றனர்.
இந்த சூழலில், 'பிரசாரத்திற்கு உங்கள் கட்சி கொடியுடன் வர வேண்டும்; பிரசாரம் முடியும் வரை வேட்பாளர் முன் கொடி பிடித்தபடி செல்ல வேண்டும்; அப்போது தான் எத்தனை பேர் நீங்கள் வருகிறீர்கள் என்று எங்களால் கணக்கெடுக்க முடியும். அதற்கு ஏற்ப, 'கவனிப்பு' செய்யப்படும்' என, தி.மு.க., நிர்வாகிகள் 'கண்டிஷன்'போடுகின்றனர்.
கட்சி கொடி இல்லாமல் செல்வோருக்கு, எந்த கவனிப்பும் செய்வதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து